
தமிழகத்தின் சுகாதார மாவட்டம் ஒன்றில் முதல்முறையாக, மகப்பேறு இறப்பு பூஜ்ஜியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை பதிவு செய்யப்பட்ட 7,991 பிரசவங்களில், மகப்பேறு இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் 2022-2023 ஆண்டில் அம்மாவட்டத்தில் ஆறு மகப்பேறு இறப்புகள் பதிவு செய்யப்பட்டன.
விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு சிறப்பான முறையில் இருந்ததே இந்த சாதனைக்கான முக்கியக் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
`விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 2022-ல் ஒரு வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கினார். அதில் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் அவர்கள் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள். பிரசவங்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகள் மூன்றாம் நிலை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்படுவார். இது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி’ என்றார் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் மருத்துவர் பிச்சைகாளி.
`முதல் கட்டமாக விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் குறைவான ஆபத்து மற்றும் அதிகமான ஆபத்தைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். அதிக ஆபத்தைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அவர்களுக்கு அருகே இருந்த `விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மையங்களில்’ பிரசவம் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டனர். அந்த மையங்களில் இருந்த சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் அவர்களுக்கு பாதுகாப்பான பிரசவம் மேற்கொள்ள உதவின’ என்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.