குழந்தையின் பாலினத்தை அறிந்த யூடியூபர் இர்ஃபான்: மருத்துவத் துறை நோட்டீஸ்

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பாலின அறிவிப்பு காணொளிகளை இர்ஃபான் தனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கியுள்ளார்.
குழந்தையின் பாலினத்தை அறிந்த யூடியூபர் இர்ஃபான்: மருத்துவத் துறை நோட்டீஸ்
படம்: https://www.instagram.com/irfansview

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்த விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப மருத்துவத் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல யூடியூபர் இர்ஃபான், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவதற்காக துபாய் சென்று மனைவிக்குப் பரிசோதனை செய்துள்ளார். இந்தியாவில் இதற்கான பரிசோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து, அதை அறிவிப்பதற்காகப் பிரத்யேகமாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் இர்ஃபான்.

இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியை தனது யூடியூப் சேனலிலும் அவர் ஒளிபரப்பியுள்ளார். பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த இர்ஃபான், இதைப் பற்றி இந்தக் காணொளிகளிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தையும் இவர் இதில் விளக்குகிறார்.

இர்ஃபான் இந்தப் பரிசோதனையை இந்தியாவுக்கு வெளியே செய்திருந்தாலும், இதுதொடர்புடைய அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டிருப்பது தடையை மீறிய செயலாகத் தெரிகிறது. எனவே, இதுதொடர்பாக விளக்கம் கோரி இர்ஃபானுக்கு மருத்துவத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேவைப்பட்டால், இர்ஃபான் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளவும் மருத்துவத் துறை சார்பில் பரிந்துரைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, குழந்தையின் பாலின அறிவிப்பு தொடர்புடையக் காணொளிகளை இர்ஃபான் தனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in