யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை செயல்பட 10 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24 அன்று குழந்தை பிறந்தது. தனது அன்றாட வாழ்க்கையை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வரும் இர்ஃபான் குழந்தை பிறந்தது தொடர்பாகவும் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் அறுவைச் சிகிச்சை அறையில் மனைவி இருப்பதையும் குழந்தை பிறப்பதையும் தொப்புள்கொடியை வெட்டுவதையும் இர்ஃபான் படம்பிடித்து வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, யூடியூப் பக்கத்திலிருந்து இர்ஃபான் அதை நீக்கினார்.
இதனிடையே, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், "மருத்துவச் சட்ட விதிகளை மீறிய அந்த நபர் (இர்ஃபான்) மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஎம்எஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது மட்டுமில்லாமல், ரெயின்போ மருத்துவமனைக்குள் அவரை அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்குமாறு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர் பயிற்சியைத் தொடர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் சட்டரீதியாகவும் துறைரீதியாகவும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை 10 நாள்கள் செயல்படத் தடை விதித்து டிஎம்எஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவமனையில் ஏற்கெனவே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.