சவுக்கு சங்கரை நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் கைது
படம்: https://www.facebook.com/felix.gerald.7

சவுக்கு சங்கரை நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் கைது

விருந்தினர்கள் அவதூறாகப் பேசினால், தூண்டும் வகையில் நேர்காணல் எடுப்பவர்களை வழக்கில் முதல் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
Published on

சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசிய வழக்கில், அவரை நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

சென்னையில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் மற்றும் தலைவர் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் அவதூறாகப் பேசிய காணொளியில் சவுக்கு சங்கரை நேர்காணல் எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, நேர்காணல் அளிப்பவர்கள் அவதூறான கருத்துகளைப் பேசினால், அவர்களைத் தூண்டும் வகையில் நேர்காணல் எடுப்பவர்களை வழக்கில் முதல் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மேலும், இவரது மனு மீது பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தில்லி சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in