
மதுரை தவெக மாநாட்டில் விஜயின் பவுன்சர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தில் நடைபெற்றது. வெயில் காரணமாக பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு முன்கூட்டியே தொடங்கியது.
விக்கிரவாண்டி மாநாட்டுத் திடலைப்போலவே மதுரை மாநாட்டுத் திடலுக்கு நடுவிலும் ரேம்ப் அமைக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கிக் கையசைத்தபடி ரேம்பின் இறுதிவரை நடந்து சென்று மீண்டும் மேடைக்குத் திரும்பி வந்தார்.
விஜய் ரேம்பில் நடந்து சென்றபோது அவருக்கு முன்னும் பின்னும் ஏராளமான பவுன்சர்கள் பாதுகாப்பிற்காக உடன் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு ரேம்ப் மீது ஏறி விஜய்க்கு அருகில் செல்ல முயன்றனர்.
அவர்களை பவுன்சர்கள் ரேம்பில் இருந்து இறக்கி விடுவதும், தள்ளி விடுவதுமாக இருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனை சந்தித்து புகார் மனு ஒன்றை இன்று (ஆக. 26) அளித்துள்ளார்.
அதில், தவெக மாநாட்டில் தாம் கலந்துகொண்டதாகவும், தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாகவும் குறிப்பிட்டுள்ள சரத்குமார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரளித்துள்ளார்.