
கடந்த 2022-ல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்து, ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிக் கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது மகளிர் சிறப்பு நீதிமன்றம்.
ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம்-ராமலட்சுமி தம்பதியினர். ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றிய வந்த ராமலட்சுமியின் மகள் சத்யா (20), தி. நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ், பலமுறை சத்யாவைப் பின்தொடர்ந்து தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022 அக்.13-ல் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளிப் கொலை செய்தார் சதீஷ். இதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சதீஷ் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி காவல்துறையினர் சதீஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது. வழக்கு விசாரணையின்போது, இந்தக் கொலையை நேரில் பார்த்த சத்யாவின் தோழி உள்ளிட்ட 70 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்த பிறகு, கடந்த டிச.27-ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சதீஷ். `தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’, மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 ஆகியவற்றின் கீழ், சதீஷை குற்றவாளியாக அறிவித்தார் நீதிபதி ஸ்ரீதேவி.
இதைத் தொடர்ந்து, மாணவி சத்யாவைக் கொலை செய்த வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனையும், மாணவி சத்யாவைச் சித்ரவதை செய்ததாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் சதீஷுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து இன்று (டிச.30) தீர்ப்பளித்தார் நீதிபதி ஸ்ரீதேவி. கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் என்பது விதிமுறையாகும்.