சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை வரவேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டவை பின்வருமாறு:
`ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!’ என்றார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை அடுத்து இன்று (செப்.26) மாலைக்குள் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.