உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

நீங்கள் சாதாரண மனிதர் அல்ல, ஓர் அமைச்சர்: உதயநிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் சாடல்

"நீங்கள் பேசியதன் விளைவுகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியாதா?"
Published on

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்கு, விளைவுகளை அறிந்து பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலேரியா மற்றும் டெங்கு நோய்களைப்போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. நாடு முழுவதிலுமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வலுவாகக் கிளம்பின. பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

தனது கருத்து குறித்து உத்தரப் பிரதேசம், கர்நாடகம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் எனப் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றிணைப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பு இதற்கான விளைவுகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

"மதச் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, பிறகு சட்டப்பிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவது. நீங்கள் பேசியதன் விளைவுகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று உச்ச நீதிமன்றம் சாடியது. மேலும், "நீங்கள் சாதாரண மனிதரல்ல, ஓர் அமைச்சர். பேசியதன் விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்" என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு விசாரணை மார்ச் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in