கள்ளக்குறிச்சியில் 4 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு?: ஆட்சியர் விளக்கம்

"ஒருவேளை கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தார்கள் என்பது உறுதியானால், தமிழக அரசு சார்பில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 4 பேர் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்தார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் விளக்கமளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் 4 பேர் உயிரிழந்தார்கள். மேலும் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பகுதி மக்கள் கள்ளச்சாராயம் குடித்த காரணத்தாலே உயிரிழந்ததாக மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

இந்தச் செய்திகள் வெளியானவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் முறையே கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதாகவும், உயிரிழப்புக்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார்கள்.

இந்த நிலையில், 4 பேர் உயிரிழந்ததற்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்ததாவது:

"தகுதி வாய்ந்த நபர் அல்லது பரிசோதனை மையத்தில் பரிசோதனை முடிவில் உறுதியான பிறகே கள்ளச்சாராயத்தை அருந்தியதால் உயிரிழந்தார்களா என்பது உறுதி செய்யப்படும்.

ஒருவேளை கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தார்கள் என்பது உறுதியானால், தமிழக அரசு சார்பில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in