பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ. 1,000 என்பதை இருமடங்காக உயர்த்தி ரூ. 2,000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ. 3,000 என்பது இருமடங்காக ரூ. 6,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4,000, ரூ. 8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ. 6 ஆயிரத்திலிருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிற் கல்லூரிகளிலும் பட்ட மேல்படிப்புகளிலும் படிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்த ரூ. 7,000 என்பது தற்போது ரூ. 14,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 14.90 கோடியை அனுமதித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 4 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத் திறனாளி மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா ரூ. 1 லட்சம் வீதம் 50 பேர் பயன்பெறும் வகையில் ரூ. 50 லட்சத்தை ஒதுக்கீடு செய்து கடந்த 10 அன்று உத்தரவிட்டுள்ளார்.