எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராய விருதுகள் 2025-ன் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டரும் எழுத்தாளருமான மருதனுக்கு இன்று வழங்கப்பட்டது.
கண்ணாடி கிரகத்தின் கவலை என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உணர்த்த தமிழ்ப்பேராயம் எனும் அமைப்பு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியம் மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2012 முதல் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தவர்களைக் கௌரவிக்கும் நோக்கத்துடன் இது வழங்கப்படுவதாக அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி கிரகத்தின் கவலை என்கிற நூலுக்காக 2025-ம் ஆண்டுக்கான அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டரும் எழுத்தாளருமான மருதனுக்கு அறிவிக்கப்பட்டது.
எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் எழுத்தாளர் மருதனுக்கான அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.
இதே விழாவில் பெரியம்மை நூலுக்காக எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்துக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதும் ண்ணாடியில் தெரியும் பறவை நூலுக்காக எழுத்தாளர் இளம்பிறைக்கு பாரதியார் கவிதை விருதும் அற்புதத் திருவந்தாதி நூலுக்காக எழுத்தாளர் கே.கே. பத்மஜா நாராயணனுக்கு ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருதும் நிலவு என்னும் கனவு நூலுக்காக எழுத்தாளர் சசிகுமாருக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தமிழ் விருதும் வழங்கப்பட்டன.
எகிப்தில் தமிழ் நாகரீகம் நூலுக்காக எழுத்தாளர் அமுதனுக்கு பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருதும் பெண் என்னும் போர்வாள் நூலுக்காக எழுத்தாளர் பிருந்தா சீனிவாசனுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருதும் வழங்கப்பட்டன.
சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது மகாகவி இதழுக்கும் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது திருவள்ளுவர் இலக்கிய மன்றத்துக்கும் அருணாச்சலக் கவிராயர் விருது ஆதித்தமிழர் கலைக்குழுவுக்கும் பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது முனைவர் கோ. தெய்வநாயகத்துக்கும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளில் நூல் ஆசிரியருக்கு தலா ரூ. 1 லட்சமும் பதிப்பகங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
முத்துத்தாண்டவர் தமிழிசை விருதுக்கு நூல் எதுவும் கிடைக்காததால், இந்த ஆண்டில் இந்தப் பிரிவின் கீழ் விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை.
Awards | TamilPeraya Awards 2025 | SRM University | SRM Institute of Science and Technology | Marudhan | Writer Marudhan |
Writer and editor of Kizhakku Pathippagam, Maruthan, received the Azha Valliappa Children’s Literature Award at the SRM Tamil Peravai Awards 2025 today