
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று (நவ.10) காலை காலமானார்.
65 வயதான பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லத்தின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இந்திரா சௌந்தர்ராஜன் முழுநேர எழுத்தாளர் பணியை மேற்கொள்வதற்கு முன்பு டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றினார்.
நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றை எழுதியுள்ள இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புகளின் மையக் கருத்தாக்கமாக அமானுஷ்யம், மறுபிறவி, ஆன்மீகம் போன்றவை இருந்தன. மேலும் அவரது `என் பெயர் ரங்கநாயகி’ நாவல், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதினத்திற்கான 3-ம் பரிசைப் பெற்றது.
இந்திரா சௌந்தர்ராஜனின் பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. மிகவும் குறிப்பாக, அவரது நாவல்களைத் தழுவி உருவான மர்மதேசம், ருத்ரவீணை போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அத்துடன் சிருங்காரம், அனந்தபுரத்து வீடு போன்ற திரைப்படங்களுக்கும் அவர் திரைக்கதைகளை எழுதியுள்ளார். இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவுக்கு பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.