
சென்னை ஈசிஆர் சம்பவத்தை முன்வைத்து பகல், இரவு என தமிழகத்தில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
நள்ளிரவு நேரத்தின்போது சென்னை ஈசிஆர் சாலையில், பெண்கள் இருந்த ஒரு காரை, ஆண்கள் இருந்த இரு சொகுசு கார்கள் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஜன.29) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது,
`ஒரு பெண்ணால் நள்ளிரவில் சுதந்திரமாக என்றைக்கு நடமாட முடிகிறதோ அன்றைக்குத்தான் முழுச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என காந்திஜி கூறியுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. நள்ளிரவு, பகல் என எப்போதும் பெண்களுக்கு பிரச்னை உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படிக்கக்கூடிய பெண் மாலை நேரத்தில் நடந்து சென்றால் கூட பிரச்னை ஏற்படுகிறது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் உறுதியாகிறது. நேற்று ஈசிஆர் சாலையில் நடந்திருப்பது மற்றுமொரு உதாரணம்.
இதற்காக இரு பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும். முதலாவதாக, காவல்துறைக்கு ஆயிரம், இரண்டாயிரம் எண்ணிக்கையில் ரோந்து வாகனங்களை வாங்கித்தர வேண்டும். இரண்டாவதாக, காவலர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கித்தர வேண்டும். மேலும், காவல்நிலையங்களை அதிகப்படுத்தவேண்டிய தேவை இருந்தால், அதை நிறைவேற்றுங்கள்.
காவல்துறைக்கு எந்தவித உபகரணங்களும் வழங்காமல், காவல்நிலையங்களையும் அதிகப்படுத்தாமல், காவல்துறைக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் இந்த கையாளாகாத திமுக அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை’ என்றார்.