சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு நடுவானில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 22 அன்று சிங்கப்பூரிலிருந்து 179 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்னை வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த ஆந்திரத்தைச் சேர்ந்த தீப்திசரிசு என்ற கர்ப்பிணிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
விமானத்தில் மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என விமானப் பணிப் பெண்கள் கேட்க, செங்கல்பட்டைச் சேர்ந்த ஆண் செவிலியர் கண்ணன் என்பவர் உதவி செய்துள்ளார். இவர் விமானப் பணிப் பெண்கள் உதவியுடன் பிரசவம் பார்க்க, கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, மருத்துவக் குழுவினர் சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் தயார் நிலையில் இருந்தார்கள். குழந்தை பிறந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு விமானம் தரையிறங்கியவுடன் உடனடியாக பெண்ணையும், குழந்தையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
பிரசவம் பார்த்த ஆண் செவிலியர் கண்ணன் என்பவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், விடுமுறைக்காக அன்றைய நாள் ஊருக்கு வந்துகொண்டிருந்தார். ஆண் செவிலியரின் இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.