சொற்பொழிவு நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சை: பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு

சொற்பொழிவு நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சை: பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து இயங்குபவர்களாக இருக்க வேண்டும்
Published on

சென்னையில் உள்ள அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து இனி அரசுப் பள்ளிகளில் கல்விக்குத் தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சியையும் அனுமதி இன்றி நடத்தக்கூடாது எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த மகாவிஷ்ணு என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழு சொற்பொழிவு சம்பவம் நடைபெற்ற அரசுப்பள்ளிகளில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியது. மேலும் இது தொடர்பான விசாரணை அறிக்கை 3 நாட்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குப் பிறகு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், `அரசுப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.

துறையின் அனுமதியின்றி தனியார் தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பயிற்சி முகாம்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றை அரசுப் பள்ளிகள் நடத்தக்கூடாது. அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்று இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை முறையான அனுமதி இன்றி நடத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in