நாதகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்: சீமான்

பெரியார் மணியம்மையின் திருமணத்தில் பிறந்ததுதான் திமுக. பெரியாரை எதிர்த்துதான் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவையும் சேர்த்து நாங்கள் வளர்க்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் இன்று (ஜன.24) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசியதாவது,

`கட்சியில் (திமுகவில்) இணைவதற்கு முன்பே 3 ஆயிரம் நபர்கள் என்று எப்படித் தெரியும்? இணைந்த பிறகு தானே எண்ணிக்கை தெரியும். இணைவதற்கு முன்பே எண்ணிக்கை எப்படித் தெரிந்தது? திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்கிறோம்.

திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிறந்ததன் காரணம் என்ன? வேலூருக்கு வந்த பெரியார் மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அண்ணாதுரை வெளியேறினார். பெரியார் மணியம்மையின் திருமணத்தில் பிறந்ததுதான் திமுக. பெரியாரை எதிர்த்துதான் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார்.

பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளியைக் கூட நாங்கள் பேசிவிடவில்லை. பொதுத் தளத்தில் பெரியார் குறித்துப் பேசி வாக்கு கேட்டால் யார் பெரியவர் என்பது தெரிந்துவிடும். நீங்கள் கேட்கத் தயாரா?

நீங்கள் தீவிரவாதி என்று கூறும் எங்கள் அண்ணனைக் குறிப்பிட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்று, மூன்றாவது சக்தியாக உருவெடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக வளர்ந்து நிற்கிறோம். சூரியன் உதித்தால்தான் உலகத்திற்கு விடிவு. ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in