
கரூர் துயரச் சம்பவத்தில் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறியுனார்.
இந்நிலையில் நள்ளிரவே விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின் பிறகு சாலை வழியாக கரூருக்குச் சென்றார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தோர் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கரூரில் நடந்திருக்கக்கூடிய இந்தக் கொடூரமான செயலை பற்றி விவரிக்க முடியாது அந்த அளவுக்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நானும் வேதனையில் இருக்கிறேன்.
நேற்று இரவு ஏழே முக்கால் மணியளவில், சென்னையில் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கரூரில் கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு
பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வந்தது. உடனே, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்புகொண்டு, இந்தச் செய்தி உண்மையா எனக் கேட்டு, மருத்துவமனைக்குச் சென்று நிலைமையைப் பார்க்கச் சொன்னேன். மாவட்ட ஆட்சியரிடமும் தொடர்புகொண்டு விசாரித்தபோது, சில தகவல்கள் கிடைத்தன.
ஐந்து நிமிடங்களில், நாலைந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதல் செய்தி வந்தது. பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதன்பின், மரணச் செய்திகள் வரத் தொடங்கின. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
மரணச் செய்திகள் வந்தவுடன், அச்சம் ஏற்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மாவட்ட அமைச்சர்களைத் தொடர்பு கொண்டேன். அன்பில் மகேஷ் தஞ்சாவூரில் இருந்தார்;
அவரை உடனே கரூருக்கு அனுப்பினேன். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை சென்னையிலிருந்து கரூருக்கு அனுப்பி, நிலைமையைக் கவனிக்கச் சொன்னேன்.
டிஜிபி, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.
இந்தச் செய்திகள் என் மனதைக் கலங்கடித்தன. உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று, மூத்த அமைச்சர் துரைமுருகன், வேலு ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, என்ன செய்யலாம் என விவாதித்தேன்.
கரூரை ஒட்டிய ஐந்தாறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் உடனடியாக கரூருக்குச் செல்ல உத்தரவிட்டேன். அவர்கள் அங்குச் சென்று பணியாற்றத் தொடங்கினர். இந்த நேரத்தில், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, இதுதொடர்பாக அறிக்கையும் வெளியிட்டேன்.
இந்த துயரச் சம்பவத்தில், மொத்தம் 39 உயிர்கள் இழந்தோம். அதில் 13 ஆண்கள், 17 பெண்கள், நான்கு ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள்.
ஒரு அரசியல் கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காத, இனி நடக்கக் கூடாத துயரம். மேலும், 51 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் - 26 ஆண்கள், 25 பெண்கள். இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என நம்புகிறேன், நிச்சயம் குணமடைவார்கள். இறந்தவர்களுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. திக்குமுக்காடி நிற்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்க உத்தரவிட்டேன்.
இன்று காலை 9:30 மணிக்கு வரத் திட்டமிட்டிருந்தேன். விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், தொலைக்காட்சியில் இந்த கொடூரக் காட்சிகளைப் பார்த்தபோது, மனம் பொறுக்கவில்லை; வீட்டில் இருக்க முடியவில்லை.
அதனால், முன்கூட்டியே ஒரு மணியளவில் விமானத்தில் கரூருக்கு வந்து சேர்ந்தேன். மீண்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
.அவர் மேலும் பேசியபோது, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொணரும். அரசியல் நோக்கத்துடன் எதையும் பேச விரும்பவில்லை. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விஜய் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்விக்கு, ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பதிலளித்தார்.