
அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்ற கேள்வி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்வைத்து களமிறங்கியுள்ளது. எனவே, விஜய் முன் இருந்த வாய்ப்புகள் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், சீமானின் நாம் தமிழர், அதிமுக ஆகிய கட்சிகள் இருந்தன. கட்சி ஆரம்பித்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவை தமிழக வெற்றிக் கழகம் பெரிதளவில் விமர்சனங்கள் வைப்பதைத் தவிர்த்து வருகிறது தவெக.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது. திமுக கூட்டணியும் வலுவாக உள்ளது. நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 18 அன்று அறிவித்தார். பாஜக இருப்பதால், அதிமுக கூட்டணியில் இணைவதும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சரி வராது எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்கள். அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சியின் தொடக்கமா இது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்த்துக்கொள்ள அதிமுக முயற்சிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "ஜனவரியில் தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒத்தக் கருத்துடையக் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்தால், அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என்றார்.
இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுபற்றி இன்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த ஆட்சியால் மக்களுக்கு மன நிம்மதி இல்லை. அதனால், இந்த அகற்றப்பட வேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்று சேர வேண்டும்" என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.