
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐஃபோனை, பக்தரிடம் திருப்பி கொடுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என ஹிந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருப்போரூரில் கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இது பிரபலமான கோயில் என்பதால், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தரிசிப்பது வழக்கம்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிர்வாகப் பணியாற்றி வருபவர் அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ். இவர் கடந்த அக்டோபர் 18 அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது, உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தவறுதலாக ரூ. 1 லட்சம் மதிப்புடைய ஐஃபோனும் உண்டியலில் விழுந்தது.
உண்டியலில் விழுந்த ஐஃபோனை திருப்பிக் கொடுக்க முடியாது, வேண்டுமானால் ஐஃபோனிலுள்ள தரவுகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் கூறியதாகத் தெரிகிறது. இவற்றின் தொடர்ச்சியாக ஐஃபோனை மீட்டுத் தருமாறு ஹிந்துசமய அறநிலையத் துறையிடம் தினேஷ் மனு அளித்துள்ளார். உரிய விசாரணைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், திருப்போரூர் முருகன் கோயில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. ஹிந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோரது முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது உண்டியலிலிருந்து காணிக்கைக்கு மத்தியில் ஐஃபோனும் வந்து விழுந்தது.
ரூ. 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது.
ஐஃபோனை கண்டவுடன், ஏற்கெனவே புகாரளித்திருந்த தினேஷை அழைத்து வரவழைத்துள்ளார்கள். உண்டியலில் இருந்த ஐஃபோன் தினேஷுடையது என உறுதி செய்யப்பட்டது.
உரிய விசாரணை நடத்தப்படும், இதன்பிறகு ஐஃபோனை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஹிந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹிந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் சென்னை மாதவரத்தில் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த அவர், "நானும் இன்று அதைச் செய்தியில் படித்தேன். அதுகுறித்து தீர விசாரித்த பிறகு, ஒரு முடிவை மேற்கொள்ளலாம். துறை சார்ந்த அதிகாரிகள் வந்துள்ளார்கள். எப்போதுமே உண்டியலில் விழுந்துவிட்டதால், மீண்டும் அதை சாமிக் கணக்கில் தான் வரவு வைப்பார்கள். இதற்கு ஏதாவது விதிவிலக்கு இருக்கிறதா என்று சட்டப்படி ஆராய்ந்து, அந்தப் பக்தருக்கு அதற்கேற்ற நிவாரணம் நிச்சயமாக வழங்குவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இருப்பின், அது ஆராயப்படும்" என்றார் அமைச்சர் சேகர் பாபு.