காவிரிப் பிரச்னையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?: துரைமுருகன் விளக்கம்

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீருக்குப் பதில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறக்க கர்நாடகம் முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் தில்லியில் கடந்த 11 அன்று கூடியது. அப்போது, ஜூலை 12 முதல் 31 வரை காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் பேசிய அவர் கூறியதாவது:

"காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடக அரசுக்கு ஓர் உத்தரவைத் தெரிவித்தது. தமிழகத்துக்குத் தர வேண்டியது நிறைய இருந்தாலும், அவர்களுடைய அடிப்படை தேவையைப் போக்குவதற்காக ஒருநாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், அந்த 1 டிஎம்சி தண்ணீரைக் கூட தர மாட்டேன் என்று அவர்கள் அடம்பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் நிலைமையை விளக்கி கர்நாடக அரசு கனிவுடன் கவனிக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால், கர்நாடக அரசு 1 டிஎம்சி தண்ணீரைத் தர முடியாது என்று சொல்லிவிட்டு, 8 ஆயிரம் கன அடி தண்ணீரைத் தருகிறோம் என்கிறார்கள்.

1 டிஎம்சி என்பது 11,574 கன அடி நீர். இதைக்கூட தராமல், 8 ஆயிரம் கன அடி நீரைத் தருவோம் என்கிறார்கள். கபிணியில் 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. கர்நாடகத்தில் தண்ணீர் இல்லையா என்று கேட்டால், தண்ணீர் இருக்கிறது.

இதுவரை மேட்டூர் அணைக்கு 4,042 கன அடி நீர் மட்டுமே வந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் நேற்று மாலை என்னிடம் பேசினார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வரிடம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளேன்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கலாமா அல்லது நாமே கடிதம் எழுதலாமா என்பதையெல்லாம் முதல்வர்தான் முடிவு செய்வார்" என்றார் துரைமுருகன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in