அசிங்கப்படுத்த முயற்சி; நாளை ஆஜராக முடியாது: சீமான்

"வருவேன் என்று சொன்னபிறகு எதற்காக இந்த வேலையைச் செய்ய வேண்டும்? நாளை வர முடியாது என்றால் நாளை மறுநாள் வருவேன்."
அசிங்கப்படுத்த முயற்சி; நாளை ஆஜராக முடியாது: சீமான்
2 min read

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"இதெல்லாம் அவசியமற்ற ஒரு கேவலமான நடவடிக்கை. இதே வழக்குக்கு மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி பதிவு செய்துகொண்டார்கள். இது அதே வழக்கு தான் என்பதால், திரும்ப அதைத்தான் பேச வேண்டும்.

அவர்களுக்கு திரும்பத் திரும்ப பேசி என்னை அசிங்கப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். இதில் இந்த ஆட்சியும், ஆட்சியாளர்களும் தான் அசிங்கப்பட்டு போகிறார்கள்.

இவ்வளவு தீவிரம் காட்டும் நீங்கள், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை , பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் தீவிரம் காட்டவில்லையே.

ஏற்கெனவே அழைப்பாணை கொடுத்தபோது, கையெழுத்திட்டு சொல்லிவிட்டு தான் வந்தேன். ஏற்கெனவே திட்டமிட்டுவிட்டேன், வந்தவுடன் வருகிறேன் என்றேன். என்னால், வேறு நாட்டில் தலைமறைவாகவும் முடியாது. கடவுச் சீட்டு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

இவ்வளவு விரட்டி வேண்டிய அவசியம் இல்லை. வேறு வழக்குகளில் இதுமாதிரி நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

விசாரணைக்கு வருகிறேன் என்று கூறிய பிறகும்... என் வீட்டில் மனைவி, பிள்ளைகள் உள்ளார்கள். பணியாள்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். நான் கிருஷ்ணகிரியில் தான் இருக்கிறேன் என்பது இங்குள்ள பாதுகாவலர்களுக்கும் தெரியும். அங்குள்ளவர்களுக்கும் தெரியும். பிறகு ஏன் என் வீட்டில் அழைப்பாணையை ஒட்ட வேண்டும்.

அழைப்பாணையை ஒட்டிவிட்டுச் சென்ற பிறகு, வீட்டிலுள்ள தம்பி ஒருவர் அதைக் கிழித்து எறிந்திருக்கிறார். இதில் என்ன பிரச்னை? வருவேன் என்று கூறினால், நான் வருவேன். ஏற்கெனவே உங்கள் விசாரணைக்கு வந்தவன் தான் நான். பயந்து ஓடி ஒளியக் கூடிய கோழையா நான்? எங்கு செல்லப்போகிறேன்? வருவேன் என்று சொன்னபிறகு எதற்காக இந்த வேலையைச் செய்ய வேண்டும்? நாளை வர முடியாது என்றால் நாளை மறுநாள் வருவேன். நாளைக்கே வந்தாக வேண்டும் என்றால், வர முடியாது. என்ன செய்வீர்கள்?

சம்பந்தப்பட்ட பெண்மணியை அழைத்து இருவரிடமும் ஒருசேர விசாரணையை நடத்துங்கள். முதலில் விசாரித்தபோது என்ன சொன்னேனோ அதைத் தான் சொல்வேன். விசாரிப்பதற்கு முன்பே நீங்களே இதுதான் நடந்தது என முடிவு செய்து கொள்கிறீர்கள்.

திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இந்த வழக்கு வரும். அதிமுக ஆட்சியில் ஏன் இது வெளியில் வரவில்லை. குறிப்பாக தேர்தல் வரும்போது இந்த விவகாரம் வெளியில் வரும். என்னைச் சமாளிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் இந்தப் பெண்மணியைக் கொண்டு வந்து பிரச்னை ஆக்குகிறார்கள்.

இது ஒன்றும் இல்லாத வழக்கு என நான் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அங்கிருந்த மஹான் ஒருவர் இதில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். விசாரித்துவிட்டு தான் தீர்ப்பு எழுத வேண்டும். விசாரணையில் அவர் தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு சான்றுகள் கொடுக்க வேண்டும். சான்றுபடி நிரூபித்த பிறகு தான் குற்றம் நடந்ததா என்பது முடிவாகும்.

ஆனால், நினைக்கும்போதெல்லாம் என்னைச் சமாளிக்க முடியாமல் இந்தப் பெண்மணி விவகாரத்தைக் கொண்டு வந்து நாடகம் போட வேண்டியது. நானும் இந்த நாடகத்தைப் பார்க்கதான் போகிறேன். நாளை தருமபுரியில் கலந்தாய்வு. வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராவேன். ஆனால், அவசரம் அவசரமாக வந்தே ஆகனும் என்றால், வர முடியாது" என்றார் சீமான்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ல் நடிகை ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதியப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது. 2011-ல் அளிக்கப்பட்ட புகாரை நடிகை 2012-ல் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் வழக்கை காவல் துறை முடித்து வைத்ததாகவும் சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்புடைய விசாரணை நிறைவடைந்த நிலையில், சீமான் மீது நடிகை அளித்த புகாரை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17-ல் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு சீமான் ஆஜராகாத நிலையில், நீலாங்கரையிலுள்ள சீமானின் இல்லத்தில் வளசரவாக்கம் காவல் துறையினர் அழைப்பாணையை ஒட்டியுள்ளார்கள். அதில், நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறை குறிப்பிடப்பட்டிருந்ததாகச் செய்திகள் வருகின்றன.

எனினும், காவல் துறையினர் ஒட்டிய அழைப்பாணை சிறிது நேரத்திலேயே கிழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அழைப்பாணை கிழிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிய காவல் துறையினர் முயற்சித்திருக்கிறார்கள். அப்போது, சீமான் வீட்டுக் காவலாளி ஒருவர் காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், தன் வசம் இருந்த துப்பாக்கியை எடுத்து காவல் துறை நோக்கி காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தியவர் மற்றும் அழைப்பாணையைக் கிழித்தவர் நீலாங்கரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்புக் கோரினார். இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in