
பாமக நிறுவனர் ராமதாஸ் நம் குலசாமி, குலதெய்வம் என கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் அன்புமணி தலைமையில் தொடர்ந்து இருநாள்களாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாமக நிர்வாகிகள் மத்தியில் இன்று உரையாற்றிய அன்புமணி பேசியதாவது:
"ஒரு முக்கியமான வேலைத் திட்டத்துக்காக நாம் கூடியிருக்கிறோம். நம் கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வலுப்படுத்த வேண்டும். அதற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருக்கும் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். நான் கூட புதிய அட்டையை நேற்று வாங்கினேன்.
ஐயா நம் குலசாமி, குலதெய்வம். ஐயா நம் கொள்கை வழிகாட்டி. இந்தக் கட்சியை ஐயா தொடங்கியிருக்கிறார். 45 ஆண்டுகால உழைப்பு. அவருடையக் கொள்களைகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி. இவற்றையெல்லாம் நாம் கடைபிடித்து முன்னேறுவோம், வெற்றி பெறுவோம். இவ்வளவு காலமாக தமிழ்நாட்டை யார் யாரோ ஆட்சி செய்திருக்கிறார்கள். இனி இது நம்முடையக் காலம். அது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக தான் இதுபோன்று கட்சியை மேலும் பலப்படுத்துகிற செயலாக உறுப்பினர் அட்டையைக் கொடுக்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.
தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறேன். ஒரு நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். அடுத்தடுத்து வேலைத்திட்டங்கள் உள்ளன. அதைச் செய்யப்போகிறோம், நீங்கள் தான் செய்யப்போகிறீர்கள். நீங்கள் என்று குறிப்பிடுவது ஏன் என்றால், நீங்கள் தான் கட்சி. சித்திரை முழு நிலவு மாநாட்டை நான் நடத்தவில்லை. நீங்கள் தான் நடத்தினீர்கள்.
சின்ன சின்ன குழப்பங்கள் வருகிறது. அதை நான் சரிப்படுத்திவிடுவேன். பொறுப்புகள் மாற்றப்படுவதெல்லாம் இல்லை. நான் இருக்கிறேன், அடுத்த 10 நிமிடங்களில் கடிதம் வந்துவிடும். நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது எதற்காக மாற்றப்பட வேண்டும். அதற்கு அவசியம் இல்லை. அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
பொதுக்குழுவால் முறையாகத் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் நான். நம் கட்சியின் தலைவர் தான் கையெழுத்திட வேண்டும், தலைவர் தான் நியமனம் செய்ய வேண்டும், தலைவர் தான் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று விதி இருக்கிறது.
அதேவேளையில் இந்தக் குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் மனதில் உள்ள வேதனை எனக்குப் புரிகிறது. ஆனால், என் மனதில் எவ்வளவு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். வெளியில் சொல்ல முடியாது. என்னைத் தெரிந்தவருக்குத் தெரியும்.
நீங்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருங்கள். கட்சிக்குள் மற்றும் கட்சிக்கு வெளியில் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்னைப் புரிந்துகொண்டீர்கள், அது போதும் எனக்கு. ஆக்கபூர்வமான வழியில் உங்களை வழிநடத்துவேன். நம் மருத்துவர் ஐயாவின் கொள்களை நிறைவேற்றி, அவருடைய கனவுகளை நனவாக்குவோம். மாவீரன் கண்ட கனவை நனவாக்குவோம். பாமக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக வருவதற்கு அனைவரும் சேர்ந்து போராடி நல்ல வேலை செய்து நாம் வெற்றி பெறுவோம்" என்றார் அன்புமணி ராமதாஸ்.