1967, 1977 போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வரலாற்றைப் படைப்போம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள பாயிண்ட்ஸ் ஷெரட்டனில் இன்று (பிப்.26) காலை 10 மணியளவில் தொடங்கியது.
விழா மேடைக்கு, தவெக தலைவர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் வருகை தந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தார்கள்.
இந்த விழாவில் விஜய் பேசியதாவது:
"என்னுடைய நண்பர், என்னுடைய சகோதரர் ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று நம்முடன் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தமிழ்நாடு அரசியலில் நாம் வளர்ந்துகொண்டிருக்கும் முதன்மையான அரசியல் சக்தி. தமிழ்நாட்டின் 1967, 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களில் நிகழ்ந்த வரலாறு போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியான நம்பிக்கையுடன் நாம் வரலாறு படைக்கவுள்ளோம்.
எங்களுடையக் கட்சிக் கொள்கைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டுக்கு அப்பாற்பட்டு மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளை நிலைநாட்ட உங்களுடன் கைக்கோர்த்து இணைந்து பணியாற்றத் தயார்.
அரசியல் என்றாலே வேறு ரகம் தான். அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்கலாம். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அதைக் கணிக்கவே முடியாது.
அதனால் அரசியலில் நிரந்தர நண்பன், நிரந்தர எதிரி இல்லை என்று சொல்வார்கள். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். அதுவே மக்களுக்கு ரொம்ப பிடித்தமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அதைக் கண்டிப்பாக நல்லவர்கள் வரவேற்பார்கள். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள்.. இல்லை, அது வேண்டாம். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும்தானே.
என்னடா இவன், திடீரென்று வருகை தந்துவிட்டானே. இதுவரை நாம் கூறிய பொய்களை நம்பி வாக்களித்து வந்தார்களே. ஆனால், தற்போது இவன் சொல்வதைப் பார்த்தால் மக்கள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறதே. அதுவே நமக்கு ஒரு நெருக்கடியாகவும் இருக்கிறதே. இவனை என்ன செய்யலாம், எப்படி தீர்த்துக்கட்டலாம் என்கிறார்கள். இப்படியொரு குழப்பம் வரும்.
இந்தக் குழப்பத்தில் கத்துவதா, கதறுவதா என்று என்ன செய்வதென்று தெரியாமல் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்லி, இப்படி ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராகப் பேசுகிறார்கள் அல்லவா, அதைப்போல தான்.
இப்படிப்பட்ட ஓர் அரசியல் களத்தில் துளியும் பயம், பதற்றம் இல்லாமல் வர எதிர்ப்புகள் அனைத்தையும் இடதுகையில் எதிர்கொண்டு, நம் தமிழக வெற்றிக் கழகம் முதலாம் ஆண்டைக் கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
இந்தவொரு காலகட்டம்தான் மிக முக்கியமான காலகட்டம். காரணம், ஒரு அரசியல் கட்சிக்கு மிகப் பெரிய பலமே அந்தக் கட்சியின் கட்டமைப்புதான். அதுதான் ஒரு கட்சியின் வேர். அடிப்படை பலமே அதுதான். ஆலமரத்தைப்போல ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் அதன் வேர் மற்றும் விழுதுகள் வலிமையாக இருக்க வேண்டும். அப்படிதான் நம் அமைப்பைப் பலப்படுத்தும் வேலையை செய்து வருகிறோம். தமிழ்நாடு முழுக்க மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்து அறிவித்து வருகிறோம்.
இந்த நேரத்தில் நம் மீது ஒரு புகார். அந்தப் புகார் என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். ஏன் இளைஞர்கள மாவட்ட நிர்வாகிகளாக இருந்தால் என்ன? அறிஞர் அண்ணா கட்சியை ஆரம்பித்தபோதும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தபோதும் அவர்கள் பின்னாடி இருந்தது வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967, 1977-ல் ஒரு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.
தற்போது இதைப்போலவே நம் மீது மற்றொரு புகார். நம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாம். ஏன் சாதாரண குடும்பத்திலிருந்து நிர்வாகிகள் வரக் கூடாதா? சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் பெரிய பெரிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள். நம் கட்சி எளிய மக்களுக்கான கட்சி. அப்படி இருக்கும்போது நம் கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி அல்ல. முன்னாடி அந்தக் காலத்தில் பண்ணையார்கள் பதவியில் இருப்பார்கள். தற்போது காலம் மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிட்டார்கள்.
மக்களுடைய நலனைப் பற்றியோ, நாட்டு நலனைப் பற்றியோ, வளர்ச்சிகளைப் பற்றியோ எதைப் பற்றியும் கவலைப்படலாமல், பணம்... பணம்... பணம்...
எந்தெந்த வழிகளில் பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று... இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள பண்ணையார்களை அரசியலைவிட்டு அகற்றுவதுதான் நம் முதல் வேலை. அதை ஜனநாயக முறைப்படி செய்ய 2026 தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்.
தற்போது புதிதாக ஒரு பிரச்னையைக் கிளப்பிவிட்டுள்ளார்கள். மும்மொழிக் கொள்கை. இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை நம் மாநில அரசுக்குக் கொடுக்க மாட்டார்களாம். எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வதைப்போல இருக்கிறது.
நிதியைக் கொடுப்பது அவர்களுடையக் கடமை. வாங்க வேண்டியது இவர்களுடைய உரிமை. இங்கு முக்கியமானப் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இங்க இவர்கள் இருவரும், அதுதான் பாசிசமும், பாயாசமும்... அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் முன்பே பேசிக்கொண்டு, சமூக ஊடகங்களில் மாற்றி மாற்றி ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் அடித்துக்கொள்வதைப்போல அடித்துக்கொள்வார்களாம். மக்கள் அதை நம்ப வேண்டுமாம். என்ன ப்ரோ, இது ரொம்ப தவறு ப்ரோ..
இதுக்கு நடுவில் நம் பசங்க.. உள்ளே சென்று ஒரு சம்பவத்தைச் செய்துவிட்டு வெளியில் வந்துவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு தவெக என்று ஹேஷ்டேக்கை போடுகிறார்கள். யார் சார் நீங்க, ஸ்லீப்பர் செல் போல எங்கு இருக்கிறீர்கள்.
இதெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்கே இது பெரிய ஏமாற்று வேலை என்பது தெரியும்.
நம்ம ஊர் சுயமரியாதை ஊர். நாம் அனைவரையும் மதிப்போம். ஆனால், சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம். உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ எப்போது கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைக் கற்றுக்கொள்ளலாம். அது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாகத் திணித்தால், எப்படி ப்ரோ?
அதனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாமும் இந்தப் பொய்ப் பிரசாரங்களையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இதை உறுதியாக எதிர்ப்போம். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று பேசினார் விஜய்.