ஜுலை 18: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவது ஏன்?

நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது
ஜுலை 18: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவது ஏன்?
1 min read

இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன் எக்ஸ் கணக்கில் காணொளி வெளியிட்டுள்ளார். தன் காணொளியில் தமிழ்நாடு பெயர் மாற்றத்தின்போது முன்னாள் தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் பேசியதையும் இணைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆங்கிலேயே அரசிடம் இருந்து இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்த பிறகு 1950-ல் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேறப்பட்டது. அன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 1-ன்படி இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருந்தன.

1956-ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது அன்றைய மத்திய அரசு. இதன்படி அன்றைய `மதராஸ் ஸ்டேட்’ மாநிலத்தின் சில பகுதிகள் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் பிரித்து அளிக்கப்பட்டன. அதன் பிறகு எஞ்சியிருந்த பகுதிதான் தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பரப்பு.

இதற்குப் பிறகு `மதராஸ் ஸ்டேட்’ என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்ற வலியுறுத்தி 1957-ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். இதனை அடுத்து மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது.

1967-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும், மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் 1967 ஜூலை 18-ல் அன்றைய முதல்வர் சி.என். அண்ணாதுரை தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேறியது.

தீர்மானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் அண்ணா, `நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது’ என்றார். இந்த உரையைத் தொடர்ந்து `தமிழ்நாடு’ என்று மூன்று முறை குரல் எழுப்பினார் அண்ணா. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாழ்க என்று 3 முறை கோஷமிட்டனர்.

மாநிலத்துக்கு இன்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 58-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில்,

`கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க!

களம் கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க!

உடல் கொண்டு, உரங் கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க!

ஜூலை 18 தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும் போதே உள்ளத்தில் மகிழ்ச்சி, ஆற்றல் ஏற்படுகிறது’ என்று பேசி தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் .

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in