
சவுக்கு சங்கருக்கு ஏன் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, அவருடையத் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தார்கள்.
அப்போது, "நீங்கள் (தமிழக அரசு) மிகவும் கடுமையாக செயல்படக் கூடாது. முறையாக நடந்துகொள்ள வேண்டும். தடுப்புக் காவல் என்பது மிகத் தீவிரமான சட்டம். சவுக்கு சங்கர் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தாரா?. சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததுதான். இவருக்கு ஏன் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கக்கூடாது?" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
இதுதொடர்பாக, பதிலளிக்கக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 28-க்கு ஒத்திவைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் சவுக்கு சங்கரின் தாயார் கமலா ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.