
வேங்கை வயல் வழக்கில் இரண்டு ஆண்டுகளாகியும் ஒருவர்கூட கைது செய்யப்படாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்புடைய வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, இரண்டு ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படாதது ஏன் என்றும், வழக்கு தொடர்பாக இரு வாரங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.