விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?: டிகேஎஸ் இளங்கோவன் | TKS Elangovan |

"விசாரணை ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு தான் நாம் தீர்மானிக்க முடியும். காரணம்..."
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கமளித்துள்ளார்.

புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

"உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறை ஆய்வு செய்து வருகிறது. நீதிபதியின் அறிக்கை வந்த பிறகுதான் யார் குற்றவாளி என்று முடிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

உள்ளூரில் நிர்வாகிகள் சிலர் செய்தத் தவறுகள் தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜய் மீது வழக்கு தொடரலாமா வேண்டாமா என்பது விசாரணை ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு தான் நாம் தீர்மானிக்க முடியும். காரணம், விஜய் அந்த இடத்துக்கு விஜய் நேரடியாக வந்து பேசிச் சென்றார்.

அங்கே நடந்த தவறுகளுக்கு யார் முக்கியமானக் குற்றவாளிகள் என்பதைப் பார்க்க வேண்டும். அந்தக் கூட்டத்தை எப்படி கூட்டினார்கள், எவ்வாறு முறைப்படுத்தினார்கள், ஏன் தண்ணீர் வசதி, உணவு வசதி போன்றவை வழங்கப்படவில்லை என்பதையெல்லாம் ஆய்வு செய்யும் பொறுப்பு அந்த ஆணையத்துக்கே உள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகே முடிவு செய்யப்படும்.

பொதுச்செயலாளர் என். ஆனந்த் அந்த இடத்தில் இருந்து சில ஏற்பாடுகளைச் செய்துள்ளார். என். ஆனந்த் அந்த இடத்திலிருந்து மக்களை முறைப்படுத்தவில்லை என்று தெரிந்ததால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆதவ் அர்ஜுனா சமூக ஊடகங்களில் தவறானப் பதிவை வெளியிட்டதால் தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

ஆனால், விஜய் நேரடியாக அந்த இடத்துக்கு வந்து பேசி விட்டுச் சென்றார். எனவே, அங்கே நடந்த நிகழ்வுகளுக்கு விஜயைப் பொறுப்பாக்குவது எப்படி என்பதையெல்லாம் ஆணையம் முடிவு செய்தால் தான், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

விஜய் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், திமுக மற்றும் தவெக இடையே ரகசிய உறவு இருப்பதாக திருமாவளவன் பேசினாரா என்று தெரியவில்லை. ஆனால், திருமாவளவன் அப்படி சொல்லியிருந்தால், விஜயை எதிர்க்கக்கூடிய ஒரே அரசியல் கட்சி திமுக தான் என்பதை திருமாவளவன் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுக தான் எங்களுடைய எதிரி என்று விஜய் எல்லா இடங்களிலும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது, எப்படி திமுக - தவெக இடையே ரகசிய உறவு என்று திருமாவளவன் சொல்கிறார் எனத் தெரியவில்லை" என்றார் டிகேஎஸ் இளங்கோவன்.

முன்னதாக, கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் விஜய் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

திருமாவளவன் கூறியதாவது:

"தமிழ்நாடு காவல் துறை இதில் காட்டும் மெத்தனம் உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது. இதில் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறதோ, அந்த முகாந்திரம் விஜய்-க்கு இல்லையா? புஸ்ஸி ஆனந்தோடு இருக்கிற மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்போது, மற்றொருவர் அருண் ராஜ் என்று கருதுகிறேன். அவரும் உடனிருந்து இந்தச் செயல்திட்டங்களையெல்லாம் வகுத்துக்கொடுத்தவர் தான். அவர் (அருண் ராஜ்) மீது ஏன் இன்னும் வழக்குத் தொடுக்கவில்லை? நீங்கள் சொன்னதைப்போல ஆதவ் அர்ஜுனா மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.

தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா? தமிழ்நாடு காவல் துறை அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப்போடுவதில்லை இளைத்தவர்கள் மீது தான் வழக்குப்போடுவது என்கிற நடைமுறையை கையாள்கிறதா?

காவல் துறையின் அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்? எல்லோரும் சமம் என்று பார்க்கும்போது அந்தக் கட்சியில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள் அல்லது அலட்சியமாக இருந்தவர்கள்... இந்த உயிரிழப்புக்குக் காரணமான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள், காலதாமதம் செய்தவர்கள், வேண்டுமென்றே காலதாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தான் வருகிறார். அவர் மீது வழக்குத் தொடுக்க தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல" என்றார் திருமாவளவன்.

TKS Elangovan | Karur | Karur Stampede | Karur Police | FIR | Vijay | TVK Vijay |Thirumavalavan |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in