
நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படாததற்கான காரணத்தைத் தமிழக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுநீளக் கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை இன்று (ஜன.9) காலை சென்னை சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் வைத்துப் பயனாளிகளுக்கு வழங்கி, பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அரிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைவரும் விரைந்து பெறும் வகையில் நாளை (ஜன.10) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ. 1000 வழங்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,
`பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால் ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் ரூ. 2100 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்தக் காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 வழங்க முடியவில்லை’ என்றார்.