அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவைப் பயங்கரவாதியைப்போல கைது செய்தது ஏன் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் மகாவிஷ்ணு. இரு பள்ளிகளிலும் இவர் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் என்பவரை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமானது. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார். அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
இதனிடையே, இன்று பிற்பகல் சென்னை வருவதாகவும் ஓடி ஒளியக்கூடிய அளவுக்குத் தான் எதுவும் பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்து நேற்று காணொளி வெளியிட்டார். இந்த நிலையில், இன்று பகல் 1.30 மணியளவில் மெல்போர்னிலிருந்து சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் ரகசியமான இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மகாவிஷ்ணுவைப் பயங்கரவாதி போல கைது செய்தது ஏன் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருவொற்றியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலுடன்தான் பள்ளியில் பேசுவதாக அவர் குறிப்பிடுகிறார். தர்க்கம் செய்யும்போது என்னை ஏன் பேச அழைத்து என்றும் கேள்வியெழுப்புகிறார். இவரை அழைத்தது யார்?
ஆசிரியர்களைப் பணியிடமாற்றம் செய்கிறீர்கள். இவருடையப் பேச்சுக்கு ஒப்புதல் அளித்த அதிகாரி யார்? பள்ளிக்கல்வித் துறைக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதா? அரசுப் பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டியதற்கான அவசியம் என்ன? இதற்கென்று நிறைய மடங்கள், ஆசிரமங்கள் உள்ளன.
இதெல்லாம் புதிய கல்விக் கொள்கையில் வருகிறது. இதற்கு முன்பும் ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
ஆசிரியர்கள் மீது பெரிய மதிப்பை வைத்துள்ளோம். ஆசிரியர்களை இதயத்தில் வைத்து போற்றுவது, மதிப்பது, வணங்குவது வேறு. காலைக் கழுவும் வழிபாடு எங்கிருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் இந்தக் கோட்பாடு எப்படி உள்ளே வந்தது?
அரசுப் பள்ளியில் இதுரை இல்லாத ஆன்மிக போதனை எப்படி வந்தது? இது வெளியில் தெரிந்ததால் சரி, வெளியில் தெரியாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? இது தொடர்ந்துகொண்டிருக்கும்.
மகாவிஷ்ணுவை விமான நிலையத்துக்குச் சென்று ஒரு பயங்கரவாதியைப் பிடிப்பதைப்போல கைது செய்தது ஏன்? வேறு செய்தியை மறைப்பதற்காக இதைப் பெரிதாக்குகிறீர்கள்.
இவர் எங்கேயோ வேறொரு இடத்தில் ஆன்மிகப் பயிற்சியைக் கொடுத்து வந்திருக்கிறார். பள்ளிக்குள் அனுமதித்தது யார்? பள்ளிக்குள் அனுமதித்தது யார் எனத் தெரியாது என்பதைச் சொல்ல ஒரு நிர்வாகம் எதற்கு?" என்று கேள்வியெழுப்பினார் சீமான்.