தெலங்கானாவுக்கும் கடமை ஆற்ற வேண்டியிருப்பதால், அதிமுகவில் இணையாமல் பாஜகவில் இணைந்ததாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி நேற்று பாஜகவில் இணைந்தார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுகவில் இணையாமல் பாஜகவில் இணைந்தது ஏன் என்று விளக்கமளித்தார்.
"கட்சி அரசியலில் கண்டிப்பாக இருக்கக் கூடாது. இயக்கம் சார்ந்த சமூகப் பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு, சமீப காலமாக தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பல விஷயங்கள் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
இதுதொடர்பாக என் அரசியல் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதேபோல, தலைவர் நயினார் நாகேந்திரனுடன் இருமுறை பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
என்னதான் வெளியிலிருந்து கத்தினாலும் ஓரளவுக்குதான் கேட்கும். ஏற்கெனவே சங்கி என்ற முத்திரை உன் மேல் உள்ளது. எனவே, அதை நீங்கள் தைரியமாக இன்னும் நன்றாகச் செய்யலாம் என்றார் (கட்சியில் இருந்தால்). அவர் மட்டும் இல்லை, எல்லோரும் கூறினார்கள்.
எனவே, சுதந்திர தின விழாவுக்கு கமலாலயத்துக்குச் சென்றேன். அப்படியே நயினார் நாகேந்திரன் கையால் பாஜகவில் இணைந்துவிட்டேன். மக்களுக்காக என் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கும். சில விஷயங்களை அமைப்புகளுக்கு வெளியிலிருந்து இல்லாமல் உள்ளே இருந்து செய்வது விரைவான பலனைக் கொடுக்கும்" என்றார் கஸ்தூரி.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்று கூறியிருக்கிறீர்கள், பல அதிமுக மேடைகளில் பேசியிருக்கிறீர்கள் இருந்தபோதிலும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளாமல் பாஜகவில் இணைந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
"நான் இருப்பது தெலங்கானா. கடந்த 5 ஆண்டுகளாக நான் தெலங்கானாவில் தான் இருந்து வருகிறேன். என் புகுந்து வீடு மட்டுமில்லாமல் எனக்கு மிகப் பெரிய ஆதரவைக் கொடுத்தது தெலுங்கு மக்கள்தான். அவங்களுக்கும் நான் கடமை ஆற்ற வேண்டியிருக்கிறது. தமிழகம் மட்டுமில்லாமல் நான் புகுந்த வீடான தெலங்கானாவிலும் என் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கூறினால், அதற்கு தேசிய நீரோட்டம் தான் சரி.
அதிமுக, இரட்டை இலை, எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான விஸ்வாசம் என்றும் இருக்கும். தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் பின்னணி, எனக்கும் அந்த விஸ்வாசம் இருக்கலாமே... இதில் முரண்பாடு இல்லையே" என்றார் கஸ்தூரி.
Actress Kasthuri | Kasthuri | TN BJP | Tamil Nadu BJP | Kasthuri Shankar | Nainar Nagenthiran | Namitha Marimuthu