
கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ. 14 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக விளக்கமளிக்க இன்று (ஜன.22) அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகனாவார் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த். இவருக்குச் சொந்தமாக காட்பாடிக்கு அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டையில் செயல்படுகிறது கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி.
இந்நிலையில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஜன.3-ல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதில், பூஞ்சோலை சீனிவாசன் இல்லத்தில் இருந்து ரூ. 28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஜன.3-ல் தொடங்கி மொத்தம் மூன்று நாட்கள் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடைப்பெற்றது. அப்போது பல்வேறு சொத்துப் பத்திரங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வுசெய்தனர். அதேநேரம், சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்ற ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், இந்த சோதனையின்போது ரூ. 13.40 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று இன்று (ஜன.22) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார் கதிர் ஆனந்த்.