கள்ளச்சாராய மரணங்கள் எதனால் நிகழ்கின்றன?: பிரபல மருத்துவர் விளக்கம்

கள்ளச் சாராயம் காய்ச்சும் போது நொதிக்க வைக்கும் பாக்டீரியாக்களின் விளைவால் "மெதனால்" எனும் எரிசாராயம் உண்டாகி விடும் வாய்ப்பும் உண்டு.
கள்ளச்சாராய மரணங்கள் எதனால் நிகழ்கின்றன?: பிரபல மருத்துவர் விளக்கம்
2 min read

பொதுவாக மது நுகர்வோர் அருந்தும் மதுக் குப்பிகளில் எதனால் (ஈதைல் ஆல்கஹால்) குறிப்பிட்ட சதவிகிதங்களில் இருக்கும்.

பீர் ( குறைந்த அளவு ஆல்கஹால்) முதல் வோட்கா ( மிக அதிக அளவு ஆல்கஹால் ) எத்தனால் ( ஈதைல் ஆல்கஹால்) அடங்கியிருக்கும்.

எத்தனால் மூளை வரை சென்று போதையை வழங்கும். இதை ஒருவர் அருந்தும் போது அவரது இரைப்பைப் பகுதியில் மதுவை உருமாற்றும் ஆல்கஹால் டீஹைட்ரஜனேஸ் எனும் நொதியின் விளைவால் எத்தனால் என்பது அசிடால்டிஹைடு ஆக உருமாற்றம் பெறுகிறது.

இந்த அசிடால்டிஹைடு மேல் ஆல்டிஹைடு டீஹைட்ரஜனேஸ் எனும் நொதி வேதியியல் மாற்றம் புரிந்து அதில் இருந்தும் ஹைட்ரஜன் வெளியேற்றம் செய்வதால் அசிட்டிக் அமிலம் உருவாகும்.

அந்த அசிட்டிக் அமிலம் ( சற்று தீங்கு குறைவாக விளைவிக்கும் அமிலத்தன்மை குறைவாக இருக்கும் அமிலமாகும்)

அதன் மீது ஃபோலிக் அமிலம் எனும் விட்டமின் பி9 வேலை செய்து கரியமில வாயு எனும் கார்பன் டை ஆக்சைடாகவும் நீராகவும் மாற்றி வெளியேற்றும்.

இத்தகைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மது இருந்தும் நம் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து லோக்கலாக பனை மரக் கள்ளு , ஈச்ச மரம், வாழைப்பழம் , ப்ளம்ஸ் , கரும்பு , அரிசி, சோளம் போன்றவற்றை போட்டு காய்ச்சி நொதிக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் அராக் எனும் சாராயத்தை மக்கள் தொடர்ந்து வாங்கி அருந்துவதும் அதைத் தொடர்ந்து சிலர் இறப்பதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

இதற்குக் காரணம் என்ன?

மது என்பது மனிதனின் மூளையை அடிமை செய்யும் வகையில் உள்ளது. மது அருந்தத் தொடங்கியவருக்கு அதைத் தொடர்ந்து அருந்தும் போது முதல் சில வாரங்கள் - குறைவான மதுவில் நல்ல போதை தரும் விளைவு கிடைக்கும்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதே அளவு மது அருந்தினால் போதை தன்மை ஏற்றம் காணாமல் குறைவதைப் போல மது விரும்பிகள் உணர்வார்கள்.

எனவே காலம் செல்லச் செல்ல முதலில் ஒரு கட்டிங் என்று தொடங்கியவர் பிறகு குவாட்டர் அடித்தால் தான் அந்த எஃபெக்ட் வருகிறது என்று அடிக்க ஆரம்பித்து பிறகு ஹாஃப் அதன் பிறகு ஒரு நாளைக்கு ஒரு ஃபுல் என்று இறங்கிவிடுவார்.

இதற்குக் காரணம் மது தரும் "டாலரன்ஸ்" (TOLERANCE) எனும் எஃபெக்ட் ஆகும்.

இதை சரி செய்ய முதலில் குறைவான மது அடங்கிய வகைகளான பீர் போன்றவற்றை அருந்ததியவர்கள் கூட நாள் செல்லச் செல்ல அதிகமான மது அடங்கிய விஸ்கி , வோட்காவுக்கு மாறத் தொடங்குவர்.

மதுவில் கிடைக்கும் போதை பற்றாக்குறையை வேறு சில போதை வஸ்துக்களான கஞ்சா / கொகய்ன் போன்றவற்றையும் இணைத்து போதை கொள்வர்.

இந்த கள்ளச்சாராயத்தைப் பொருத்தவரை இதில் ஆல்கஹால் அளவுகள் அரசு நெறிமுறைக்கு உள்ளாக இல்லாமல் சற்று அதிகமாகவே இருக்கும்.

அதனால் மக்களில் சிலர் போதைக்காகவும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காகவும், இது போன்ற கள்ளச்சாராயங்களை வாங்கி அருந்தும் பழக்கத்தில் இருக்கிறார்கள்.

இவ்வாறு கள்ளச் சாராயம் காய்ச்சும் போது நொதிக்க வைக்கும் பாக்டீரியாக்களின் விளைவால் "மெதனால்" எனும் எரிசாராயம் உண்டாகி விடும் வாய்ப்பும் உண்டு.

அரசால் அங்கீகரிக்கப்படும் மதுக்குப்பிகளில் தரநிர்ணயம் செய்யப்படுவதால் மெதனால் கலப்படம் பெரும்பான்மை இருப்பதில்லை .

ஆனால் இது போன்று தனியாரால் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயங்களில் மெதனால் எனும் எரிசாராயமும் கலப்படமாக உருவாகி விட வாய்ப்பு உள்ளது.

இதைப் பருகும் போது ரத்தத்தில் மெதனால் -> ஃபார்மால்டிஹைடாக மாறி பிறகு -> ஃபார்மிக் அமிலமாக மாறிவிடுகிறது.

இதில் ஃபார்மிக் அமிலம் என்பது சிவப்பு எறும்புகள் கொட்டும் போது நமக்குள் செலுத்தும் அமிலமாகும் ஃபார்மால்டிஹைடு என்பது இறந்தவர்களின் உடல் கெடாமல் இருக்க எம்பால்மிங் செய்ய உபயோகாக்கும் திரவமாகும்.

மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள் இவை செய்யும் தீய விளைவுகளை சுட்டும்.

உடலின் அமிலத்தன்மை மிக அதிகமாகி அதனால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சாதாரணமாக 30 முதல் 240 மில்லி எரிசாராயம் குடித்தாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிரந்தரமாக கண்பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படும். முறையான வைத்தியம் பார்க்காமல் விட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உயிர் பிழைத்தாலும் பார்வை இழப்பை சரி செய்ய இயலாது.

பார்கின்சன் போன்ற நரம்பியல் வியாதி வந்து எப்போதும் நடுக்கம் , நடை தளர்வு போன்றவை தொடரும்.

எரிசாராயம் அருந்தியோர் 12 முதல் 24 மணிநேரத்திற்கு சாதாரணமாகவே இருப்பார்கள். அதற்குப்பிறகு வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், பிதற்றல் நிலை, கண்பார்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஏற்படும் முறையான சிகிச்சை வழங்காவிடில் நிரந்தர மூர்ச்சை நிலைக்குச் சென்று மரணம் சம்பவிக்கும். கள்ளச்சாராயத்தில் ( எரிசாராயம்) மெதனால் சேர்ந்து விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதை அருந்துவது உயிருக்கு ஆபத்தானது.

அதைக் காய்ச்சுவதும் அருந்துவதும் உயிருக்கு ஆபத்தானது. அப்போ மிச்சது நல்ல சாராயம் என்று பொருள் அல்ல...

எதனாலோ ? மெதனாலோ?

இரண்டுமே நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. மது தரும் போதை மாற்றும் நம் வாழ்வின் பாதை. மது அருந்துவதைக் கைவிடுவோம்.

புகை / கஞ்சா போன்ற தீய பழக்கங்களை இன்றே கைவிடுவோம்.

கட்டுரையாளர்:
Dr. அ.ப. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in