
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மூலம் மாணவர்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக அழுத்தத்தில் இருக்கக்கூடும் என பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 8 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் வெளியிட்டார். இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், சுதந்திர நாள் விழாக்களுக்கு மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து செய்தியாளர்களிடத்தில் விளக்கினார்.
"தேர்வுகளின் மூலமான மதிப்பீடுகளைக் கடந்து, இன்று வகுப்புவாரியாகத் தொடர்ச்சியான மதிப்பீடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம். அதனால் தான், மாநில அளவிலான சாதனைக் கணக்கீடு என்று வரும்போது, ஏறத்தாழ 9.80 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்து அதுசார்ந்த திறன் சார்ந்து இருக்கும் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு மாணவர்களை உளவியல் ரீதியாக அழுத்தத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. 11-ம் வகுப்பைத் தவிர்த்துவிட்டு 12-ம் வகுப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்தும் காலம் எல்லாம் தற்போது கடந்துவிட்டது. 11-ம் வகுப்பில் கவனம் செலுத்தாமல் எந்தவொரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலையை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒவ்வொரு ஆசிரியர்களும் உணர்ந்துள்ளார்கள்.
12-ம் வகுப்புக்கான முன்னேற்பாட்டுக்கான ஓர் ஆண்டாக 11-ம் வகுப்பு கல்வியாண்டு அமைந்திட வேண்டும். மாணவர்களுக்கு அழுத்தம் இருக்கக் கூடாது. கற்றலும் கற்பித்தலும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவே 11-ம் வகுப்பு அமைந்துவிட வேண்டுமே தவிர, அதுவும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஓர் அழுத்தத்தைக் கொடுத்துவிடக் கூடாது. இதற்காக எடுக்கப்பட்ட முடிவு தான் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து. 8 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. தற்போது அதை நீக்கியதன் மூலம், நல்ல முடிவை அது தரும் எனும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எங்களுக்கும் உள்ளது. கண்டிப்பாக அது நல்ல முடிவைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
School Education Department | Anbil Mahesh | 11th Board Exam | Class 11 Public Exam |