பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடப்பதன் காரணமாக அயனாவரத்தில் தற்காலிகமாக வசித்து வந்தார். அவர், நாள்தோறும் பெரம்பூருக்கு வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு வந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு வாசலில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகின.
தாக்குதலைத் தொடர்ந்து, கிரீம்ஸ் சாலையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவருடைய உயிர் பிரிந்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசுப் பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நாளை சென்னை வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தார்கள். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்கள்.
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்:
ஆம்ஸ்ட்ராங் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். 2000-வது ஆண்டு முதல் அரசியலில் இயங்கி வருகிறார். புரட்சி பாரதம் கட்சியில் இருந்த இவர், பூவை மூர்த்தி மறைவுக்குப் பிறகு தனித்து செயல்பட்டு வந்தார். 2006 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரானார்.
2007-ல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மாயாவதியின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் 2008-ல் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதே ஆண்டில் மாயாவதியை சென்னைக்கு அழைத்து வந்து அமைந்தகரையில் மாபெரும் பேரணியை நடத்தியதன் மூலம் வலிமையான தலைவராகப் பிரபலமாக அறியப்பட்டார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின், சைதை துரைசாமியை எதிர்த்து பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டார். இதில் தோல்வியடைந்த ஆம்ஸ்ட்ராங் 2.7% வாக்குகளைப் பெற்றார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு தமிழ்நாட்டில் பெரிய அரசியல் செல்வாக்கு இல்லாதபோதிலும், அம்பேத்கர் கருத்தியலைப் பிரதிபலிக்கும் முக்கியமான குரலாகப் பிரபலமாக அறியப்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். பட்டியலின மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். அம்பேத்கர் இளைஞர் வட்டம், வெளிச்சம் அறக்கட்டளை, மாணவர்களுக்கு இலவசப் பயிலகம் மூலம் கல்விக்கும், தொழில் முனையவும் நிறைய உதவிகளைச் செய்து வந்துள்ளார் ஆர்ம்ஸ்ட்ராங். சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் தனது செயல்பாடுகள் மற்றும் உத்வேகம் மூலம் மிகுந்த நம்பிக்கையூட்டக்கூடிய தலைவராக இருந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.