தமிழ்நாட்டின் புதிய அறநிலையத்துறை அமைச்சர்: யார் இந்த எஸ். ரமேஷ்? | TVK | Minister S Ramesh |

துடிப்புள்ள இளைஞராக, கட்சியின் பிரசார மேடைகளில் அனல் பறக்கப் பேசி, மக்களைக் கவர்ந்தார் ரமேஷ். அதுவே இவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரபலமானவராக ஆக்கியது.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜயுடன் அமைச்சர் எஸ். ரமேஷ்
முதலமைச்சர் சி.ஜோசப் விஜயுடன் அமைச்சர் எஸ். ரமேஷ்படம் - https://x.com/RameshOffcl
3 min read

தமிழ்நாடு அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலும், அதற்குப் பிந்தைய அமைச்சரவை விரிவாக்கமும் பல்வேறு ஆச்சரியங்களையும் புதிய சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. அதிலும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அமைச்சரவையில், ஒவ்வொருவரின் பின்னணியும் சுவாரஸ்யம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. அதில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். ரமேஷ். கோயில் அர்ச்சகரின் மகன் என்ற சாதாரணப் பின்னணியிலிருந்து அரசியலில் களமிறங்கி, இன்று தமிழ்நாட்டின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான அறநிலையத்துறையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று, அதிரடியாகச் செயல்படவும் தொடங்கியுள்ளார் எஸ். ரமேஷ். ஆனால், இந்த இளம் அமைச்சரின் வேகத்திற்கு நிகராக அவர் மீதான விமர்சனங்களும் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

அமைச்சர் ரமேஷின் குடும்பப் பிண்ணனி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் 1994-ல் பிறந்தவர் எஸ். ரமேஷ். தற்போது 31 வயதாகும் இவர், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சீனிவாசன், மறைமலைநகர் பகுதியில் உள்ள சிவா விஷ்ணு கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவரது தாய் சுமதி ஒரு சமையல்காரர். சென்னை ஏ.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் பி.இ பட்டம் பெற்ற ரமேஷ் ஒரு அட்டோ மொபைல் நிறுவனத்தில் பணியாற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில ஊடகங்களிலும் அவர் பணியாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் இவர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் Graduate Professional என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் ஈடுபாடு

விஜய் ரசிகரான எஸ். ரமேஷ், ரசிகர் மன்றத்தில் இணைந்து செயல்பட்டுள்ளார். அதுவே இவரை புஸ்ஸி ஆனந்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட எஸ். ரமேஷ், மக்கள் பணிகளில் ஈடுபட்டார். துப்பாக்கி படம் வெளியானபோது அந்தப் படத்தின் போஸ்டரை ஆசையோடு வாங்கி தன் வீட்டின் இரும்பு பீரோவில் அவர் ஒட்டி வைத்ததாக நினைவுகூர்ந்த அவரது தந்தை சீனிவாசன், தனது மகனுக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறி இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.

கட்சியில் முக்கிய பொறுப்பு

விஜய் மக்கள் இயக்கம் பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியாக மாறியபோது, கட்சியின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் முக்கிய பொறுப்பாக அது கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறவும், குறிப்பாக இளந்தலைமுறையினரைக் கவரவும் ஊடக, தகவல் தொடர்புப் பிரிவின் பணிகள் முக்கிய பங்காற்றின என்பது மறுக்க முடியாதது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியதாலேயே அவருக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடக் கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியது. அரசியல் பின்னணி இல்லாத ரமேஷ், தேர்தல் செலவுகளுக்காக தனது வீட்டை அடமானம் வைத்துப் போட்டியிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனாலும், அவரது பிரமாணப் பத்திரம் ரமேஷுக்கு இருக்கும் சொத்து மதிப்பைப் பற்றிக் கூறுகிறது.

பிரமாணப் பத்திரம் கூறுவது என்ன?

இவர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தின்படி, இவருக்குச் சொந்தமாக அசையாச் சொத்துக்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவரிடமுள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு 33,22,220 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அவருக்கு மொத்தம் 13,63,750 ரூபாய் கடன் இருக்கிறது. இந்தத் தொகையில் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தில் பெறப்பட்ட தங்கக் கடன்களும், யெஸ் வங்கியில் தனிநபர் கடனும் அடங்கும் என்கிறது பிரமாண பத்திரம்.

ஸ்ரீரங்கத்தில் புகழடைந்த எஸ். ரமேஷ்

துடிப்புள்ள இளைஞராக, கட்சியின் பிரசார மேடைகளில் அனல் பறக்கப் பேசி, மக்களைக் கவர்ந்தார் ரமேஷ். அதுவே இவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரபலமானவராக ஆக்கியது. தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை விஜய் திருச்சியில் தொடங்கியதும் ரமேஷுக்கு பக்க துணையாக இருந்தது. இதனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைராஜை விட 33,590 வாக்குகள் அதிகமாக, மொத்தம் 1,03,235 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

தவெக அமைச்சரவையில் பிராமணர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் வெற்றி பெற்ற வெங்கட்ரமணனுக்கு உணவுத்துறையும், ஸ்ரீரங்கத்தில் வென்ற ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பிராமணர் ஒருவருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

தமிழக அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை என்பது 1967-ல் தனி அமைச்சருடன் முக்கியமான துறையாக மாறியது. அதற்கு முன்பும் இந்து சமயம் சார்ந்த விவகாரங்களைக் கவனிக்க அமைச்சரவையில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும் முழுநேர இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக முதலில் பொறுப்பேற்றவர், திமுகவின் முந்தைய தலைவர் கருணாநிதிதான். அவரைத் தொடர்ந்து அறநிலையத்துறை என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்குப் பிரபலமாக விளங்கியவர் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன். அவரது பதிவிக் காலத்தின்போது பல கோயில்களுக்கு அதிரடியாக குடமுழுக்கு, புதுப்பித்தல் பணிகள் நடந்தன. இன்னும் வி.வி. சுவாமிநாதன், கே.பி. ராமலிங்கம், கே.ஆர். பெரியகருப்பன், சேவூர் ராமச்சந்திரன், கடந்த ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு வரை யாருமே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. இதுவே ரமேஷுக்கு இந்தத் துறை ஒதுக்கப்பட்டதில் சர்ச்சையை உருவாக்கியது. இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் திராவிட அரசியல் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவே, இப்பொறுப்பு வழங்கப்பட்டது முக்கியமான அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டது அரசியல் தளங்களில் பெரும் பேசுபொருளை உருவாக்கியுள்ளது.

சாதி அடிப்படையிலான பொறுப்பா?

அமைச்சரவையில் பிராமணர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதும், குறிப்பாக ரமேஷிற்கு அறநிலையத்துறை வழங்கப்பட்டதும், “சாதி அடிப்படையில்தான் இந்த பதவி வழங்கப்பட்டதா?” என்ற விமர்சனங்களையும் கேள்விகளும் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் எஸ். ரமேஷ் கடும் கண்டனமும் விளக்கமும் அளித்துள்ளார். தான் சாதி அடிப்படையில் அமைச்சராக்கப்படவில்லை என்றும், பல ஆண்டுகளாகத் தவெக தலைவருடன் பயணித்த களப்பணிக்கும், விசுவாசத்திற்கும், தகுதிக்கும் கிடைத்த அங்கீகாரமே இப்பதவி என்றும் அவர் குறிப்பிட்டார். தவெக அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம் என்றும், திறமையின் அடிப்படையிலேயே தனக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறி, சாதி ரீதியான விமர்சனங்களை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

கொள்கைத் தலைவர் பெரியார்

பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தவெக-வின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும், தற்போது அமைச்சராகவும் இருக்கும் சூழலில், திராவிட மற்றும் பகுத்தறிவு கொள்கைகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், சாதியக் கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்டு, சமூக நீதிக்காகப் போராடிய தந்தை பெரியாரை ஒரு கொள்கைத் தலைவராகத் தான் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆன்மிகமும் பகுத்தறிவும் வெவ்வேறானவை அல்ல என்றும், சாதிப் பாகுபாடற்ற சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். விமர்சகர்களுக்குப் பதிலடி தரும் வகையில், பெரியாரின் சமூக நீதிப் பாதையையும், தவெக-வின் சமத்துவக் கொள்கைகளையும் தான் முழுமையாகப் பின்பற்றுவதாக அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்கிறது நக்கீரன்.

அமைச்சராக அதிரடிச் செயல்பாடுகள்

அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தனது துறை சார்ந்த பணிகளில் அமைச்சர் ரமேஷ் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பது, முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் எவ்வித பாகுபாடுமின்றி செய்து தருவது ஆகியவை தனது முதன்மைப் பணி என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை.

கோயில்களில் கள ஆய்வு, கண்டிப்பான அணுகுமுறை, புதிய மாற்றத்தைக் கொண்டு வரத் துடிக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றால் இப்போது சமூக ஊடகங்களில் அறியப்படுகிறார் அமைச்சர் எஸ். ரமேஷ். புதிய அமைச்சரின் செயல்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறையை எவ்வாறு உயர்த்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

logo
Kizhakku News
kizhakkunews.in