பிரதமர் பாராட்டிய மதுரை தமிழாசிரியை: யார் இந்த சுபஸ்ரீ?

மருத்துவ மூலீகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சுபஸ்ரீ, தனக்குச் சொந்தமான 40 சென்ட் இடத்தில் 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைத் தாவரங்களை வளர்த்து வருகிறார்
பிரதமர் பாராட்டிய மதுரை தமிழாசிரியை: யார் இந்த சுபஸ்ரீ?
1 min read

மூலிகைத் தோட்டம் அமைத்து 500-க்கும் மேற்பட்ட மூலிகைகளை வளர்த்து, பிறருக்கு உதவி வரும் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை சுபஸ்ரீயை தன் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சியூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். மருத்துவ மூலீகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனக்குச் சொந்தமான 40 சென்ட் இடத்தில் 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார்.

கொரோனா காலத்தில் தொற்று பாதித்த பலருக்கும் மூலிகை மருந்து கொடுத்து குணப்படுத்தியுள்ள சுபஸ்ரீயிடம் இருந்து மூலிகை சம்மந்தமான தகவல்களைத் தெரிந்துகொள்ள தினமும் ஆராய்ச்சியாளர்கள், தோட்ட ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் அவரது மூலிகைத் தோட்டத்துக்குச் செல்வது வாடிக்கையாக நடக்கும் நிகழ்வாகும்.

500-க்கும் மேற்பட்ட மூலிகைகளை வளர்த்து அதன் மூலம் பிறருக்கு உதவிவரும் சுபஸ்ரீயின் முயற்சியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செப்.30) ஒலிபரப்பான தன் 114-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழாசிரியை சுபஸ்ரீயை வெகுவாகப் பாராட்டினார்.

மருத்துவத் தாவரங்களின் மதிப்பு, அவற்றை வளர்க்கும் முறை, அவற்றை பாதுகாக்கும் அவசியம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விளக்க, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வுகளை நடத்து வருகிறார் தமிழாசிரியை சுபஸ்ரீ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in