எடப்பாடி பழனிசாமி vs சசிகலா, எடப்பாடி பழனிசாமி vs டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி vs ஓ. பன்னீர்செல்வம் வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சாட்டையைச் சுழற்றத் தொடங்கியிருக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையனைப் புறந்தள்ளுவது எடப்பாடி பழனிசாமிக்கு இது புதிதொன்றும் கிடையாது. அதற்கு 1990-களுக்குச் செல்ல வேண்டும்.
எம்ஜிஆர் விசுவாசி, ஜெயலலிதா விசுவாசி, அதிமுக விசுவாசி, அமைதியானவர் எனப் பெயர் பெற்ற செங்கோட்டையன் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடித்து ஆடத் தொடங்கியிருப்பது ஏன்? செங்கோட்டையன் பின்னணியில் இருப்பது யார்? யார் இந்த செங்கோட்டையன்?
அதிமுகவில் உள்ளபடி சீனியர் என்றால், கே.ஏ. செங்கோட்டையன் தான். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்திலிருந்தே இவர் அதிமுக விசுவாசி.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். விவசாயப் பின்னணி உள்ள குடும்பம். குள்ளம்பாளையம் கிராமத்தில் ஊர் திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பண்ணையார் கணக்காக வலம் வந்துகொண்டிருந்தவர் தான் செங்கோட்டையன்.
அதிமுக விசுவாசியாக இருந்தாலும், இவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம் திராவிட முன்னேற்றக் கழகம். 1971-ல் திமுக கிளைச் செயலாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
திமுகவிலிருந்து வெளியேறி 1972-ல் அஇஅதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது, அவர் பக்கம் நின்றார். அதிமுகவில் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்டு வந்த கேஎன்கே ராமசாமி, அரங்கநாயகம், முத்துமாணிக்கம் ஆதரவாளராக வலம் வந்தார். கோபி நாடாளுமன்ற எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஆனார்.
1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தான் செங்கோட்டையனின் முதல் ஏணி. திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான பொருளாளராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டவர் செங்கோட்டையன். செப்டம்பர் 5 அன்று செய்தியாளர் சந்திப்பில் இதை நினைவுகூர்ந்திருந்தார் செங்கோட்டையன்.
இந்தப் பொதுக்குழுவுக்குக் கவனமாகச் செலவு செய்து சிறப்பாக நடத்தி முடித்ததற்காக எம்ஜிஆரின் பாராட்டைப் பெற்றார். பொதுக்குழுவுக்கான செலவை எடுத்துக்கொள்ளுமாறு பிளாங் செக்கை எம்ஜிஆர் கொடுத்தபோதும், அதை ஏற்க மறுத்து விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.
கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையனை 1977 தேர்தலில் சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார் எம்ஜிஆர். கோபியைவிட்டு சத்தியில் போட்டியிட செங்கோட்டையன் தயங்கியபோது, தன் பெயரைச் சொல் என்று எம்ஜிஆரால் ஊக்கப்படுத்தப்பட்டு வென்று முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குத் தேர்வானார்.
கேஎன்கே ராமசாமி கோபியில் புகழ்பெற்றவர். இவருடைய செல்வாக்கு குறைந்தவுடன் 1980 முதல் கோபியில் போட்டியிடத் தொடங்கினார் செங்கோட்டையன். கோபியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட தனது சித்தப்பா சுப்பிரமணியத்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார். இன்று வரை கோபி எம்எல்ஏ யார் என்றால் கே.ஏ. செங்கோட்டையன் தான் என்று இணையத்தில் தேடாமலேயே பதில் சொல்லக்கூடிய அளவுக்கு அங்கு வெற்றிகளைக் குவித்து வருகிறார். ஒரே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வென்று சாதனை படைத்ததற்குச் சொந்தக்காரராக இருக்கிறார். 1996-ல் கோபியில் தோல்வியடைந்தார். 2001-ல் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எம்ஜிஆரோடு நிற்காமல் ஜெயலலிதா, சசிகலாவுக்கும் விசுவாசியாக இருந்தவர் தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் பக்கம் இருந்த செங்கோட்டையன், அவருடைய மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா பக்கம் துணை நின்றார். காங்கேயத்தில் ஜெயலலிதாவை அழைத்து விழா நடத்தி, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றார். ஜெயலலிதாவின் பிரசாரங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துபவர் செங்கோட்டையன் தான். தேர்தல் பிரசார நேரங்களில் ஜெயலலிதா தேடும் முகம் செங்கோட்டையன்.
பிரசாரங்களைத் திட்டமிடுபவர் எனில், எந்த இடத்தில் பேச வேண்டும், எந்த எல்லைக்குள் பிரசாரம் இருக்க வேண்டும், ஜெயலலிதாவின் வாகனம் நிற்குமிடத்தைத் தேர்வு செய்வது என மிகவும் நுட்பமாகத் திட்டமிடுபவர். ஓ. பன்னீர்செல்வத்துக்கு முன்பே, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய இடத்தில் இருந்தவர் தான் செங்கோட்டையன்.
விளைவாக போக்குவரத்துத் துறை அமைச்சரில் தொடங்கி தலைமைச் செயலர் பதவி வரை என ஆட்சி மற்றும் கட்சியில் செல்வாக்கைப் பெற்றார். 2011-ல் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோதுகூட, எந்தச் சலசலப்பும் இல்லாமல் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார். அவரே கட்சித் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என விரும்பினார். ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்த சசிகலாவால் மட்டுமே முடியும் என ஆணித் தரமாக நம்பினார். ஏன் சசிகலா என்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தி மற்றும் வாஜ்பாயிடம் சசிகலாவை அறிமுகம் செய்துவைத்தபோது, ஜெயலலிதா என்ன சொன்னார் என்பது தனக்கு தெரியும் என்றும் அப்போது தான் உடனிருந்ததாகவும் பழை நினைவுகளை மேற்கோள் காட்டினார்.
கூவத்தூரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றபோது, அடுத்த முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவானது. அப்போது முதலில் அடிபட்ட பெயர் செங்கோட்டையன். எனினும் இறுதியில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் முன்மொழியப்பட்டு அவர் தமிழ்நாட்டின் முதல்வரானார்.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் முக்கியஸ்தராக செங்கோட்டையன் வளர்ந்தபோது தான், அவருடைய அறிமுகம் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைக்கிறது. செங்கோட்டையனுடனான பழக்கம் தான் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் அடித்தளமாக அமைந்தது என்றும் கூறுகிறார்கள். பின்னாளில் செங்கோட்டையனைப் பின்னுக்குத் தள்ளி கட்சிக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை நடத்தியபோதும், பலவிதமான உட்கட்சிப் பிரச்னைகள் எழுந்தபோதும் எல்லாவற்றையும் திறமையுடன் சமாளித்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் மிக மூத்தவரான செங்கோட்டையனின் கண் முன்னே கடகடவென வளர்ச்சி கண்டு உச்சத்தில் அமர்ந்துள்ளார்.
2016-ல் அதிமுக வென்றபோதுகூட செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகே, செங்கோட்டையனுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் முதல்வர் வாய்ப்பு வந்தபோதுகூட அதைச் சரிவர பயன்படுத்திக்கொள்ளாத செங்கோட்டையன், கட்சி நலனுக்காக அமைதி காத்த தீவிர விசுவாசி என்ற பெயரை மேலும் நிலைநாட்டினார். செப்டம்பர் 5 அன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இருமுறை தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் கட்சி நலனுக்காகவே அமைதியாகப் பயணித்ததாகவும் அவர் இதைச் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலில் தனக்கு ஜூனியர் என்றாலும், எந்த ஈகோவும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையையும் ஏற்றுக்கொண்ட செங்கோட்டையன், கட்சிப் பணியைச் செவ்வெனச் செய்து வந்தார். அதிமுக ஆட்சியிலும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு பாராட்டுகளைச் சம்பாதித்தார். 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத் திட்டத்தை மாற்றினார். க்யூஆர் கோட் வசதியுடன் தரமான புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டன. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில்கூட இது இல்லாமல் இருந்தது. மாணவர்களுக்கான ரேங்க் நடைமுறை கைவிடப்பட்டது. மொழிப் பாடங்களை ஒரே தாளாக மாற்றினார். அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படது. கல்விக்கென பிரத்யேக சேனல் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நீட், ஜேஇஇ, சிஏ தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு விபத்துக்க காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இவற்றுக்கு மத்தியில் பல்வேறு அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருந்தன என்ற விமர்சனமும் இருந்தது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது உள்ளிட்டவை சர்ச்சையானதும் கவனிக்கத்தக்கவை.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவுக்குப் பின்னடைவாக அமைந்தாலும், கோபியில் செங்கோட்டையன் தன் செல்வாக்கை இழக்காமல் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று 8-வது முறையாக கோபியிலிருந்து சட்டப்பேரவைக்குச் சென்றார். தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் அமைதி காத்து வந்த செங்கோட்டையன் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கலகக் குரலை எழுப்பத் தொடங்கினார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற காரணமாக இருந்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளியில் பிப்ரவரி மாதம் பாராட்டு விழா நடத்தப்பட்டது. செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இதைப் புறக்கணித்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் அதில் இடம்பெறவில்லை என்பது செங்கோட்டையன் வெளியே சொன்ன காரணமாக இருந்தது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். தன் வீட்டில் குவியும் ஆதரவாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் இருந்தார். சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் நீக்கப்பட்டபோதும்கூட, கோபிசெட்டிபாளையத்துக்குள்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது செங்கோட்டையன் பங்கேற்றுப் பேசினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
எடப்பாடி பழனிசாமியைச் சீண்டும் செயல்களில் செங்கோட்டையன் அடுத்தடுத்து ஈடுபட்டு வந்ததால், கலகக் குரல் என்று வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பே இருந்து வந்தது. கட்சியிலிருந்து செங்கோட்டையன் ஓரங்கட்டப்படுவதாலேயே அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் பேசப்பட்டு வந்தன.
இடைப்பட்ட காலத்தில் சற்று அமைதி நிலவியது. அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியானது. பாஜக மேலிடத்தைத் தனியாகச் சென்று சந்திப்பை நிகழ்த்தினார். தற்காலிகமாகப் பிரச்னை ஓய்ந்தது என்று எண்ணியபோது தான், செப்டம்பர் 5 அன்று மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்தார் செங்கோட்டையன்.
செப்டம்பர் 5 அன்று செய்தியாளர் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எது பிடிக்காதோ, அதையே கோரிக்கையாக வைத்தார் செங்கோட்டையன். பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என 10 நாள்கள் கெடுவும் விதித்தார். அரசியலில் கெடு விதிப்பது கேடு விளைவிக்கும் என்பார்கள்.
செங்கோட்டையன் கோரிக்கைக்கு அடிபணியாமல், மூத்த தலைவரும் என்றும் பாராமல் துணிச்சலாக அவருடைய பதவி மட்டுமில்லாமல் அவருடைய ஆதரவாளர்கள் பதவியையும் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பல பிரிவினை மோதல்களைச் சந்தித்த அதிமுக, தற்போது எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன் என்ற இடத்தை வந்தடைந்திருக்கிறது.
தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றி சிறிதும் யோசிக்காமல் அதிமுகவின் வெற்றிக்காகத் துணிச்சலுடன் களமிறங்கியுள்ளார் செங்கோட்டையன். சொந்தக் கருத்தை வெளிப்படுத்தி, பொதுச்செயலாளருக்கு எதிராகப் பேசி, கட்சியைக் கலகலக்க வைத்துள்ளார். இதற்கெல்லாம் காலம் என்ன பதில் வைத்திருக்கிறது? செங்கோட்டையனின் இந்தக் கலகக்குரலுக்கு என்ன எதிர்வினை கிடைக்கப் போகிறது? அதிமுகவின் வரலாற்றில் இந்தத் தருணம் என்னவாக மதிப்பிடப்படும்?
KA Sengottaiyan | AIADMK | Edappadi Palaniswami | ADMK | MGR | Sasikala | Jayalalitha |