
தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு,
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று (ஜன.19), திருநெல்வேலி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்) ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜன.20), தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை மறுநாள் (ஜன.21) தொடங்கி 23-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜன.24 மற்றும் 25 தேதிகளில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.