தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால், நாடும் வளர்ச்சியடையும்: பிரதமர் மோடி

தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால், நாடும் வளர்ச்சியடையும்: பிரதமர் மோடி
ANI
2 min read

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) தனி விமானம் மூலம் திருச்சி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாநில அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தார்.

பிரதமர் பேசியதாவது:

"2024-ன் முதல் பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவது எனக்குக் கிடைத்த பாக்கியம். ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும்.

2023-ன் கடைசி சில வாரங்கள் நிறைய பேருக்கு மிகக் கடினமானதாக அமைந்துள்ளது. தீவிர கனமழை காரணமாக சக மக்களை இழந்துள்ளோம். நிறைய குறிப்பிடத்தக்க பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தமிழ்நாட்டு மக்களுடன் மத்திய அரசு துணை நிற்கிறது. எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாங்கள் மாநில அரசுக்கு வழங்குகிறோம்.

சில நாள்களுக்கு முன்பு விஜயகாந்தை நாம் இழந்தோம். இவர் திரையுலகில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்தான். திரைப்படங்களில் தனது செயல்களால் அனைவரது மனங்களையும் வென்றவர். அரசியல்வாதியாக தேச நலனையே அவர் எப்போதும் முன்னிறுத்தியிருக்கிறார். அவருக்கு எனது அஞ்சலிகள்.

தமிழ்நாட்டின் மற்றொரு தலைமகன் எம்.எஸ். சுவாமிநாதனையும் நினைவுகூர்கிறேன். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதில் முக்கியப் பங்கை ஆற்றியவர் இவர். இவரையும் கடந்தாண்டு நாம் இழந்துள்ளோம்.

தமிழ்நாட்டின் துடிப்பான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். தமிழ் கலாசாரம் குறித்து அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். உலகில் எங்கு சென்றாலும் என்னால் தமிழ்நாடு குறித்து பேசாமல் இருக்க முடியாது.

நல்ல அரசாங்கத்துக்கான அடையாளமாகத் தமிழ் பாரம்பரியம் நாட்டுக்குக் கொடுத்துள்ள புனித செங்கோல் நடைமுறையை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ளோம்.

முதல் ஐந்து பொருளாதாரங்களில் இன்று இந்தியாவும் ஒரு அங்கமாக இருக்கிறது. உலகின் புதிய நம்பிக்கையாக இந்தியா உருவெடுத்துள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். தமிழ் மக்களும், நாடும் இதிலிருந்து பலன்களைப் பெறுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்வோம் என்பதற்கான பெரிய அடையாளமாகத் தமிழ்நாடு வளர்கிறது.

கடந்த ஓராண்டில் 40-க்கும் மேற்பட்ட மத்திய அரசின் அமைச்சர்கள் 400 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்கள். தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்தால், நாடும் வேகமாக வளர்ச்சியடையும்.

கடலோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மீனவர்களின் வாழ்வியலை மாற்ற நிறைய பணிகளைச் செய்துள்ளோம். முதல்முறையாக மீன் வளத் துறை எனத் தனியாக ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. முதல்முறையாக விவசாயிகளுக்கான கடன் அட்டைத் திட்டம் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004 முதல் 2014 வரை மாநிலங்களுக்கு ரூ. 30 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுடைய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 120 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. 2004 முதல் 2014 வரையிலான காலகட்டம் வரை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இரண்டரை மடங்கு கூடுதல் நிதியை எங்களது அரசு ஒதுக்கியுள்ளது" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in