
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வரும் டிச.10 முதல் தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலின் மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நேற்று (டிச.7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மேற்கு, வட மேற்கு திசைகளில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், அதன்பிறகு வரும் டிச.11-ல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம்-இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், வரும் டிச.10-ல் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் டிச.11-ல் டெல்டா மாவட்டங்களிலும், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச. 12, 13 ஆகிய தேதிகளிலும் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.