ஏப்ரல் முதல் சென்னை மெட்ரோ கார்டுகள் செல்லாது: பயணிகள் என்ன செய்ய வேண்டும்?

இந்த ஸ்மார்ட் கார்டுகளை ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து இலவசமாக வழங்குகிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
ஏப்ரல் முதல் சென்னை மெட்ரோ கார்டுகள் செல்லாது: பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
1 min read

புழக்கத்தில் உள்ள பழைய சென்னை மெட்ரோ கார்டுகள் ஏப்ரல் மாதம் முதல் செல்லாது எனவும், அதற்கு பதில் சிங்கார சென்னை கார்டுகளை வாங்கிப் பயணிகள் உபயோகிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள பழைய சென்னை மெட்ரோ ரயில் கார்டுகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் செல்லாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் கார்டுகளுக்கு மாற்றாக, இலவசமாக வழங்கப்படும் சிங்கார சென்னை கார்டுகளை வாங்கி உபயோகப்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் பயணத்துக்குப் பயன்படுத்தும் வகையில், கடந்த 2023-ல் சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கார்டுகளை ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வழங்குகிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.

இவற்றைப் பயன்படுத்தி சென்னை மாநகப் பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. பயணத்திற்கு மட்டுமல்லாமல், அங்காடிகள் மற்றும் உணவகங்களில் கூட இந்த ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தலாம்.

இந்த ஸ்மார்ட் கார்டுகளுக்காக ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகை க்ளோபல் பேலன்ஸ், ரீடெயில் பேலன்ஸ் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். க்ளோபல் பேலன்ஸைப் பயணங்களுக்காவும், ரீடெயில் பேலன்ஸைப் பிற பரிவர்த்தனைக்காகவும் பயனர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது பயணிகள் உபயோகப்படுத்தும் சென்னை மெட்ரோ கார்டுகளில் இருக்கும் பேலன்ஸ் தொகையை முழுவதுமாக பயன்படுத்திய பிறகு, அவற்றை மெட்ரோ நிர்வாகத்திடம் சமர்பித்து, அவற்றுக்கான டெபாசிட் தொகையைப் (ரூ. 50) பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in