தேசிய கல்விக்கொள்கை விவகாரம்: கரண் தாப்பரின் பேட்டியில், பிடிஆர் கூறியது என்ன?

கடந்த 75 ஆண்டுகளில், மும்மொழியைப் படித்த மாநில மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதை காண்பிப்பதற்கு தரவுகள் இருக்கிறதா?
தேசிய கல்விக்கொள்கை விவகாரம்: கரண் தாப்பரின் பேட்டியில், பிடிஆர் கூறியது என்ன?
2 min read

தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படும் என்று கடந்த மாதம் பேட்டியளித்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இதன் தொடர்ச்சியாக மும்மொழிக் கொள்கை விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளானது. இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக​ராஜன், தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக, தி வயர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார்.

அந்த பேட்டியில் கரண் தாப்பரால் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு பிடிஆர் அளித்த பதில்களும்...

`புதிய கல்விக் கொள்கையில் 'ஹிந்தி கட்டாயம்' என்பது குறிப்பிடப்படாதபோது, யோகேந்திர யாதவ் போன்ற நிபுணர்கள் அதற்கு ஆதரவாக பேசும்போது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஹிந்தி திணிக்கப்படுவதாக நம்புவதற்கான காரணம் என்ன?’

`கல்வி என்பது எங்களுக்கு அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மிகவும் முக்கியமானது. கல்விதான் சமூகநீதியின் அடிப்படை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1921-ல் ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் கல்வி கட்டாயம் என்று நீதிக் கட்சியின் ஆட்சியின்போது சட்டமியற்றப்பட்டது.

எமர்ஜென்ஸி காலத்தில் 42-வது சட்டதிருத்தத்தின் வழியாக மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டதை நாங்கள் எதிர்க்கிறோம். அது மாநிலப்பட்டியலில்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

எனவே தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து, பள்ளிக் கல்வியை எப்படி நடத்தவேண்டும் என்று எங்களிடம் யாரும் வற்புறுத்த முடியாது என்பதை நம்புகிறோம். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பிடத்தக்க தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அவற்றில் அந்நாட்டு ஃபெடெரல் அரசு தலையிடமுடியாது. மாகாண அரசுகள் விதிக்கும் வரைமுறைகளுக்கு அவை கட்டுப்பட்டவை.

யோகேந்திர யாதவ் படிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தேசிய கல்விக் கொள்கை அறிக்கையைப் பலமுறை நான் படித்திருக்கிறேன். அதில் எங்கெல்லாம் இந்தி என்ற வார்த்தையும், சமஸ்கிருதம் இருக்கிற வார்த்தையும் பல இடங்களில் இருக்கிறது. ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும். யாதவின் கருத்துகளை நான் கருத்தில் கொள்ளப்போவது இல்லை.

மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். நாங்கள் அரசை அமைத்திருக்கிறோம். எங்களுக்கு இருமொழிக் கொள்கை போதும், மும்மொழிக்கொள்கை தேவையில்லை என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். யாதவ் என்ன யோசிக்கிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

மும்மொழிக்கொள்கையை பிடிவாதமாக நீங்கள் புறக்கணிப்பதற்கும், இருமொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கும் காரணம் என்ன? சிறுவயதில் மாணவர்களால் பல மொழிகளை சுலபமாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியுமே?

உத்தர பிரதேசம், பீஹார், போன்ற மாநிலங்களில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழிகள் தெரியும்? அது கூட வேண்டாம்... உத்தர பிரதேசத்தில் எத்தனை பேருக்கு இரண்டு மொழிகள் தெரியும்?

கடந்த 75 ஆண்டுகளில், மும்மொழியைப் படித்த மாநில மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதை காண்பிப்பதற்கு தரவுகள் இருக்கிறதா? இருமொழிக் கொள்கை தேவை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சார ரீதியாக இருமொழிக் கொள்கையை பின்பற்றி அதில் முன்னேற்றத்தை காண்பித்திருக்கிறோம். மும்மொழிக் கொள்கையை பின்பற்றிய ஒரு மாநிலம் தமிழ்நாட்டைவிட கல்வித் தரத்தில் முன்னேறியுள்ளதை காட்டுங்கள், பார்க்கலாம். வேறு யாருக்காகவோ எங்கள் கொள்கையை ஏன் மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை விளக்குங்கள்.

மும்மொழிக்கொள்கை முதல் மற்றும் இரண்டாம் கல்விக்கொள்கையின் அங்கமாக இருந்தது. மிகவும் முக்கியமாக இந்தி கட்டாயம் என்பது தேசிய (மூன்றாம்) கல்விக் கொள்கையில் குறிப்பிடவில்லை. முன்பு கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதுபோல, இப்போது ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?

எப்போது நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்? கடந்த 75 ஆண்டுகளாக அல்லது, 1952-ல் மெட்ராஸ் மாகாணமாக தமிழ்நாடு இருந்தபோதிலிருந்து மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டதில்லை. இதற்கு முன்பு இருந்த எந்த ஒரு மத்திய அரசும் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து கட்டாயப்படுத்தியதில்லை. நிதியைத் தடுத்துவிட்டு அவர்களின் கொள்கையை திணிக்க முயற்சித்ததில்லை.

உ.பி., பீஹார், ம.பி. போன்ற மாநிலங்களில் மாணவர்கள் முன்மொழி அல்லது இருமொழியைக் கற்றுக்கொள்ள என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளது? மும்மொழிக்கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது குறித்த ஆதாரம் எங்குமே இல்லாதபோது, எதனால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு எங்களின் இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

இதை கூறிவதற்கு அது சார்ந்த ஆராய்ச்சிப் படிப்பை நீங்கள் முடித்திருக்கவில்லை. எங்களிடம் 70 ஆண்டுக்கால தரவுகளும், இருமொழிக் கொள்கையால் நடந்த முன்னேற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. அப்படி மும்மொழிகொள்கை குறித்து மத்திய அரசிடம் ஏதாவது தரவுகள் இருக்கிறதா?

`மும்மொழிக்கொள்கைபடி, மூன்று மொழிகளையும் அந்தந்த மாநிலங்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று யோகேந்திர யாதவ் ஆலோசனை கூறுகிறார். தேசிய கல்விக்கொள்கை கூறியதுபோல, மூன்று மொழிகளில் இரண்டு மொழி இந்திய மொழியாக இருக்கவேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதத்தை தவிர்த்துவிட்டு, தமிழ், ஆங்கிலம், கிளாசிக்கல் தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளலாமே?’

`தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.யாகவோ வென்று, அவரது திட்டத்தை முன்மொழியட்டும். இருமொழிக் கொள்கையைத் தவிர வேறு எதிலும் எங்களுக்கு விருப்பம் இல்லை. தேர்தலில் வென்று ஆட்சியமைத்து அவருக்கு தேவைப்பட்டதை நடைமுறைப்படுத்தப்பட்டும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பள்ளிக்குழந்தைகளுக்கு ஏராளமானவற்றை கற்றுக்கொடுப்பது கடினமான பணியாகும்.

இந்தியாவின் வேறு எந்த பகுதியை ஒப்பிட்டாலும், இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளோம். எனவே எங்களுக்கு முன்மொழிக்கொள்கை மீது ஈடுபாடு கிடையாது. எங்களை தேர்ந்தெடுத்த மக்களின்படி நாங்கள் பணியாற்றுகிறோம்.

முழுமையான பேட்டியைக் காண:

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in