இந்திய விமானப் படையால் வான் சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவதை ஒட்டி, இன்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரைப் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் 92-வது தினத்தை ஓட்டி, வரும் அக்டோபர் 5 மற்றும் 6-ல் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படைத் தளபதி, விமானப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நிகழ்வு மெரினா கடற்கரையில் இன்று நடைபெறவுள்ளது. எனவே இதற்கான முன்னெச்சரிக்கையாக மெரினா கடற்கரைப் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட இதர ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வான் சாகச நிகழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலையத்தின் பயண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 5.15 மணி வரையிலும், அக்டோபர் 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட சில நேரங்களிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெற்றது.