பாலியல் அத்துமீறல் சம்பவத்தால் திருச்சி என்.ஐ.டி.யில் போராட்டம்: பின்னணி என்ன?

வார்டன் பேபி மாணவிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதைத் தொடர்ந்து வார்டன் மீது என்.ஐ.டி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என ஆட்சியர் அறிவித்தார்
பாலியல் அத்துமீறல் சம்பவத்தால் திருச்சி என்.ஐ.டி.யில் போராட்டம்: பின்னணி என்ன?
https://x.com/mishraaman01
1 min read

திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத வார்டனைக் கண்டித்து நேற்று (ஆகஸ்ட் 29) இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை அடுத்து மாணவிகளிடம் விடுதி வார்டன் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

என்.ஐ.டி கல்லூரி மாணவிகள் விடுதியில் இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நேற்று (ஆகஸ்ட் 29) காலை 9 மணி அளவில் ஒப்பந்த ஊழியர்கள் அங்கே சென்றுள்ளனர். அப்போது விடுதியின் ஒரு அறையில் தனியாக இருந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஒப்பந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, விடுதி வார்டன் பேபியிடம் புகாரளித்துள்ளார். ஆனால் மாணவியின் புகார் மீது வார்டன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கல்லூரி வளாகத்துக்கு வந்தபிறகு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர் கதிரேசனைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், வார்டன் பேபி பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாக பேசினார், எனவே வார்டன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள்.

ஒப்பந்த ஊழியர் மீது கல்லூரி நிர்வாகம் சார்பில்தான் புகார் அளித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் புகார் அளிக்கவில்லை மாணவியின் தந்தைதான் புகார் அளித்தார் எனவும், காவல்துறை விசாரணையின்போது தங்களைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே கல்லூரி நிர்வாகத்தினர் குறியாக இருந்தனர் எனவும் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

இதை அடுத்து போராட்டம் நடத்திய மாணவிகளிடம் இன்று காலை, தான் பேசிய அனைத்துக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் வார்டன் பேபி. வார்டன் மன்னிப்பு கேட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர் மாணவர்கள். இந்தப் பாலியல் அத்துமீறல் விவகாரம் குறித்து, மாநில மகளிர் உரிமை ஆணையம் விசாரிக்கும் என ஆணையத்தின் தலைவர் குமரி அறிவித்தார்.

பெண்கள் விடுதி வார்டன் பேபி மீது நடவடிக்கை எடுக்க மாணவிகள் புகாரளித்தனர், அவர் மீது என்.ஐ.டி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.டி கல்லூரிக்குச் சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in