பிரபல ரௌடி சீசிங் ராஜா இன்று (செப்.23) காலை தமிழக காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 5-ல் அன்றைய பகுஜன் சமாஜ் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது பெரம்பூர் இல்லத்துக்கு வெளியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிந்த தமிழக காவல்துறை இந்த படுகொலை தொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 28 நபர்களைக் கைது செய்தது.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் தலைமறைவாக இருந்த ரௌடி சீசிங் ராஜாவை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29-வது நபராக நேற்று தமிழக காவல்துறை கைது செய்தாக செய்தி வெளியானது. ரௌடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
இதை அடுத்து தமிழக காவல்துறையினரால் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் ரௌடி சீசிங் ராஜா. இன்று (செப்.23) காலை பங்கிங்ஹாம் கால்வாய்க்கு அருகே சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்ற காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கே தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் காவல்துறை வாகனத்தை நோக்கி சீசிங் ராஜா சுட்டதாகவும், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுட்டதில் சீசிங் ராஜாவின் வயிறு, நெஞ்சில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
ரௌடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரௌடி சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 39 வழக்குகள் உள்ளன. மேலும் 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சீசிங் ராஜா.
இந்த என்கவுன்டர் தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் (தெற்கு) சிபி சக்கரவர்த்தி, ஆமஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வேளச்சேரி வழக்கில்தான் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.