வக்ஃபு சட்ட திருத்த மசோதா: அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

சிறுபான்மையின மக்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. எனவே, தற்போதைய அரசாங்கம் எங்களின் வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டும்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா: அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
1 min read

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வக்ஃபு சட்ட திருத்த மசோதா நேற்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மசோதா மீது 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தார்கள்.

மாநிலங்களவையில் தமிழகத்திற்கென 18 எம்.பி.க்கள் உள்ளார்கள். இதில், திமுகவைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். திமுக சார்பில் மசோதாவை எதிர்த்து திருச்சி சிவா பேசினார். அதோடு, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. பா. சிதம்பரம், மதிமுக எம்.பி. வைகோ ஆகியோரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, மூ. தம்பிதுரை, சி.வி. சண்முகம், ஆர். தர்மர், என். சந்திரசேகரன் என நான்கு அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் உள்ளார்கள்.

சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தம்பிதுரை, `சிறுபான்மையினரின் நலனுக்காக அதிமுக உறுதிபூண்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பெருமளவில் இஸ்லாமிய மக்களும், இஸ்லாமியத் தலைவர்களும் இருக்கிறார்கள். சிறுபான்மையின மக்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. எனவே, தற்போதைய அரசாங்கம் எங்களின் வேண்டுகோளைப் பரிசீலிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். அதேநேரம், பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in