மாடுகள் 3-வது முறையாகப் பிடிபட்டால் ஏலம் விடப்படும்: கே.என். நேரு

மாடுகள் 3-வது முறையாகப் பிடிபட்டால் ஏலம் விடப்படும்: கே.என். நேரு

"சாலையில் சுற்றித் திரியும் மாட்டை முதல்முறையாகப் பிடித்தால் ரூ. 5,000 அபராதமும், இரண்டாவது முறையாகப் பிடித்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்."

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மூன்றாவது முறையாகப் பிடிபட்டார், அதை ஏலத்தில் விட்டுவிடுவோம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 9.30 மணியளவில் கூடியது. அதிமுக உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினார்கள். கேள்வி நேரம் முடிந்தவுடன் அதற்கான நேரம் வழங்கப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். எனினும், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து, கேள்வி நேரம் நடந்து முடிந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சாலையில் சுற்றித் திரியும் நாய் மற்றும் மாடுகளால் ஏற்படும் பிரச்னைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.என். நேரு விளக்கமளித்தார்.

"தெரு நாய்கள் மிக முக்கியமானப் பிரச்னையாக உள்ளது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளில் இதைச் சரியாகக் கையாளாததால் இன்று நிறையப் பிரச்னை வந்துள்ளது.

நிறைய பணக்காரர்கள் நாயை வளர்க்கிறார்கள். பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என பல முறை அறிவுறுத்துகிறோம். இருந்தபோதிலும், நாயைப் பூங்காவுக்கு அழைத்து வரும்போது சில தவறுகள் நடந்துவிடுகின்றன.

நாங்கள் இதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறோம். இன்னும் அலுவலர்களைக் கொண்டு நாய்களுக்குக் கருத்தடை செய்து பெருகாமல் பார்த்துக் கொண்டு மக்களைப் பாதுகாக்கும் பணியை, நிச்சயமாக எங்களுடையத் துறை செய்யும்.

மாடுகளால் அதிகளவு பிரச்னை ஏற்படுகிறது. மாடுகள் வேண்டாம் என்றும் சொல்கிறார்கள், மாடுகளுக்கு அகத்திக் கீரையும் கொடுக்கிறார்கள்.

சாலையில் சுற்றித் திரியும் மாட்டை முதல்முறையாகப் பிடித்தால் ரூ. 5,000 அபராதமும், இரண்டாவது முறையாகப் பிடித்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றோம். மூன்றாவது முறையாக மாட்டைப் பிடித்தால் அதை ஏலத்துக்கு விட்டுவிடுவோம். அதற்கான சட்டம் வருகிறது" என்றார் கே.என். நேரு.

logo
Kizhakku News
kizhakkunews.in