ஆம்ஸ்ட்ராங் கொலை எப்படி நடந்தது?: வெட்டுக்காயம்பட்ட சகோதரர் விளக்கம்

"எதிர்புறத்தில் கத்தியுடன் 2, 3 பேர் ஓடி வருகிறார்கள். ஒருவர் வெட்ட முயன்றார். அதிலிருந்து தப்பிவிட்டேன்.."
ஆம்ஸ்ட்ராங் கொலை எப்படி நடந்தது?: வெட்டுக்காயம்பட்ட சகோதரர் விளக்கம்
ANI

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தின்போது நடந்தது பற்றி, வெட்டுக்காயம்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி விளக்கமளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது சம்பவ இடத்திலிருந்து, அவரைக் காப்பாற்ற முயன்று வெட்டுக்காயம்பட்ட அவருடைய சகோதரர் வீரமணி இன்று செய்தியாளர்களிடம் நடந்தது பற்றி விவரித்தார்.

"திடீரென ஒரே சப்தமாக இருந்தது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், சப்தம் அங்கிருந்து வந்ததாக நினைத்தேன். என்னவென்று வந்து பார்த்தபோது, ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுகிறார்கள் என்று கோஷம் எழுப்பி ஓடினார்கள்.

இதைக் கேட்டு சம்பவ இடத்துக்கு ஓடினேன். எதிர்புறத்தில் கத்தியுடன் 2, 3 பேர் ஓடி வருகிறார்கள். ஒருவர் வெட்ட முயன்றார். அதிலிருந்து தப்பிவிட்டேன். இதிலிருந்து தப்பித்து எழுவதற்குள் மற்றொருவர் என்னை வெட்ட முயன்றார். நான் குனிந்துவிட்டு ஓடும்போது தடுக்கி கீழே விழுந்தேன். மூன்றாவதாக ஓடிய நபர் என் தலையில் வெட்டினார். கீழே விழுந்தவுடன், என் முதுகில் ஒருவர் வெட்டினார்.

இவற்றைப் பொருட்படுத்தாமல் தம்பியின் அருகே ஓடினேன். ரத்த வெள்ளத்தில் இருக்கிறாயே என்று கூறி அவரை எழுப்ப முயற்சித்தேன்.

ரத்த வெள்ளத்தில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. என் மனைவி வந்து துணியைக் கொடுத்து தலையில் வைத்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

நான் சப்தம் போட்டு ஓடும்போது, கொலை செய்தவர்கள் எதிரே வேகமாக வந்தார்கள். சப்தம் போட்டவுடன் அந்தப் புறம் ஓடுவார்கள் என நினைத்தேன். அவர்கள் வாகனத்தை எதிர்புறத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். எனக்கு எதிராக வந்ததால், எனக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.

குற்றவாளி யார் என்பதைப் பார்க்க எனக்கு நேரமில்லை. வெறும் 10 விநாடிதான். கத்தியைதான் பார்க்க முடிந்தது. யார் வருகிறார்கள் என்று பார்க்க முயற்சித்திருந்தால், விழுந்திருப்பேன்.

எப்போதும் மாலை 6 மணிக்கு நான் வேணுகோபால் சுவாமி கோயிலைத் திறப்பேன். கோயிலைத் திறந்துவிட்டு உள்ளே அமர்ந்திருப்பேன். அன்றைய நாள் வெள்ளிக்கிழமை என்பதால், கோயிலுக்குள் இருந்தேன். அப்போதுதான் இதுபோல சப்தம் கேட்டது. தம்பியை வெட்டுகிறார்கள் என்ற குரல் கேட்டவுடன் ஓட ஆரம்பித்தேன்.

தம்பியை நோக்கி ஓட ஆரம்பித்தவுடன் என் மீது வெட்டு பாய்ந்தது. கத்தி நம்மை நோக்கி வருவதை மட்டும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in