தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நடந்தது என்ன?

பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று (மார்ச் 1) காலை 10 மணி அளவில் தில்லி காவல்துறையினருக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளது.
தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நடந்தது என்ன?
1 min read

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று (மார்ச் 1) வந்த மிரட்டல் மின்னஞ்சலை அடுத்து அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சோதனையின் முடிவில் சந்தேகப்படும்விதமாக எதுவும் கண்டறியப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் தில்லியில் உள்ள சாணக்யாபுரி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பொதிகை தமிழ்நாடு இல்லம் உள்ளது. அரசுப் பணிகளுக்காக தில்லி செல்லும் தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் இங்கு தங்குவது வழக்கம். இதேபோல அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் சொந்தமான இல்லங்கள் தில்லியில் உள்ளன.

இந்நிலையில், பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று (மார்ச் 1) காலை 10 மணி அளவில் தில்லி காவல்துறையினருக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்திற்கு விரைந்து சென்ற தில்லி காவல்துறையினர், அங்கிருந்த ஊழியர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்களை வைத்து தீவிரமாக சோதனையிட்டார்கள்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், சந்தேகப்படும்விதமாக அங்கு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வெறும் புரளி என்று முடிவுக்கு காவல்துறை வந்தது. எனினும், தமிழ்நாடு இல்லத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மின்னஞ்சல் தொடர்பான விசாரணையை நடத்தியது காவல்துறை.

கடந்த ஓரிரு மாதங்களாக தில்லியில் உள்ள பள்ளிகளுக்கும், விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் சாணக்யபுரி பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in