சீமான் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்ற காவலர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ல் நடிகை ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது. 2011-ல் அளிக்கப்பட்ட புகாரை நடிகை 2012-ல் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் வழக்கை காவல் துறை முடித்து வைத்ததாகவும் சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்புடைய விசாரணை நிறைவடைந்த நிலையில், சீமான் மீது நடிகை அளித்த புகாரை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17-ல் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு சீமான் ஆஜராகாத நிலையில், நீலாங்கரையிலுள்ள சீமானின் இல்லத்தில் வளசரவாக்கம் காவல் துறையினர் அழைப்பாணையை ஒட்டியுள்ளார்கள். அதில், நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறை குறிப்பிடப்பட்டிருந்ததாகச் செய்திகள் வருகின்றன.
எனினும், காவல் துறையினர் ஒட்டிய அழைப்பாணை சிறிது நேரத்திலேயே கிழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அழைப்பாணை கிழிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிய காவல் துறையினர் முயற்சித்திருக்கிறார்கள். அப்போது, சீமான் வீட்டுக் காவலாளி ஒருவர் காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், தன் வசம் இருந்த துப்பாக்கியை எடுத்து காவல் துறை நோக்கி காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினரைத் தடுத்து நிறுத்தியவர் மற்றும் அழைப்பாணையைக் கிழித்தவர் நீலாங்கரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்புக் கோரினார். இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது வீட்டில் இல்லை. கட்சிப் பணி காரணமாக ஓசூர் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது.